சென்னை: அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை இழுத்தடிக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது என சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார்.
கடந்த 2011 - 2015 அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2018-ம் ஆண்டு 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகளில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்பட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி என். லோகேஷ்வரன் முன்பாக நடந்து வருகிறது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நீதிமன்றம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக தினமும் 50, 50 பேர் வீதம் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் பென்-டிரைவ் வடிவில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குற்றச்சாட்டுப் பதிவுக்காக செந்தில் பாலாஜி, அசோக்குமார் உள்ளிட்டோர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதையடுத்து நீதிபதி என்.லோகேஷ்வரன், ‘வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஒவ்வொருவரும் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்வதை ஏற்க முடியாது. குறிப்பிட்ட காலத்துக்குள் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். உங்கள் இஷ்டம்போல மனுக்களை தாக்கல் செய்து வழக்கை இழுத்தடிக்கும் எந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்க முடியாது.
எப்போது மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்பதை முன்கூட்டியே தெரிவி்க்க வேண்டும். அதைவிடுத்து விருப்பம்போல வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்து வழக்கை இழுத்தடிக்க நினைத்தால் உங்களது ஜாமீன் ரத்து செய்யப்படும்’ என எச்சரித்தார்.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் உள்ளிட்டோரிடம், ‘நீங்களும் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்போகிறீர்களா?’ என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள், ‘விரைவில் மனுக்கள் தாக்கல் செய்யப்படும்’ என்றனர். அதையடுத்து நீதிபதி விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.