சூளைமேடு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி
ஆயிரம் விளக்கு தொகுதியில், இம்முறை தேர்தல் களம் இதுவரை இல்லாத வகையில் பரபரப்பாக உள்ளது.
திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ எழிலன் நாகநாதன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, நாம் தமிழர் கட்சி சார்பில் திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம், தவெக சார்பில் ஜே.சி.டி.பிரபாகர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முகமது கவுஸ் உள்பட 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக - சாதனைகளைக் கூறி வாக்குசேகரிப்பு
திமுக வேட்பாளர் எழிலன், கூட்டணி கட்சி நிர்வாகி களுடன் பிரச்சாரம் செய்கிறார். மேலும் அவருக்கு ஆதரவாக முதல்வரின் மூத்த சகோதரர் தமிழரசு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர்.
வள்ளுவர்கோட்டம் அருகே கக்கன் காலனியில் வாக்குசேகரித்த திமுக வேட்பாளர் எழிலன்.
திமுகவின் 5 ஆண்டுகால சாதனைகளைப் பட்டியலிட்டு தொகுதி மக்களிடையே வாக்கு சேகரித்து வருகிறார் எழிலன்.
அதிமுக - குடிநீர், பட்டா வழங்க நடவடிக்கை
அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் வளர்மதி, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தொகுதியில் சுத்தமான குடிநீர், குடிசை மாற்று வாரிய வீடுகளை சீரமைப்பது, தேவையானவர்களுக்கு பட்டா வழங்குவது, வள்ளுவர் கோட்டம் அருகே பாலம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
நுங்கம்பாக்கம் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் களஞ்சியம்.
நாதக - அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்
நாதக வேட்பாளரும், திரைப்பட இயக்குநருமான மு.களஞ்சியம், மக்களின் அடிப்படை தேவைகளை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அரசு பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றுவது, நடமாடும் மருத்துவமனை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வது உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சூளைமேடு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் ஜே.சி.டி பிரபாகர்.
தவெக – தன்னிறைவு தொகுதியாக மாற்றப்படும்
தவெக வேட்பாளர் ஜேசிடி பிரபாகர், ‘‘ஆயிரம் விளக்கு தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன்’’ எனக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளர்களின் பிரச்சாரம், கடும் வெயிலையும் தாண்டி அனல் பறக்கிறது.