தமிழகம்

தமிழக தேர்தல் களத்தில் அனல் பறந்த அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் நிறைவு

‘48 மணி நேர அமைதி கால’ கட்டுப்பாடுகள் என்னென்ன?

வெற்றி மயிலோன்

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் இன்று மாலை 6 மணி​யுடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலையுடன் தங்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். இதையடுத்து, வாக்​குப்​ப​திவு நாளான 23-ம் தேதி மாலை 6 மணி வரையி​லான 48 மணி நேர அமைதி கால கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்ந்த நிலையில், இன்று காலை முதல் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சென்னையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின், ஆட்டோ ஓட்டியும், இளைஞர்களிடம் செல்ஃபி எடுத்தும் உற்சாகமாக பிரச்சாரம் செய்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தான் போட்டியிடும் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தான் போட்டியிடும் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வாகனப்பேரணி சென்று வாக்கு சேகரித்தார். இன்று மாலையில் காரைக்குடி பாண்டியன் திரையரங்கம் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். நந்தனத்தில் நடந்த பிரச்சாரத்தில் விஜய் கலந்துகொண்டு பேசினார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஒரே கட்​ட​மாக 23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் கடந்த மார்ச் 15-ம் தேதி வெளி​யிட்​டது. அன்றைய தினமே நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​தன. தமிழகம் முழு​வதும் பறக்​கும் படை​யினர், நிலைக் கண்காணிப்​புக் குழு​வினர் தீவிர சோதனை நடத்தி வருகின்​றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

234 தொகுதிகளிலும் மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் களத்தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இதற்​காக 75,064 வாக்​குச்​சாவடிகள் தயார் நிலை​யில் உள்​ளன. தேர்​தல் பணி​யில் 83,875 போலீ​ஸார், 40,427 அரசுஊழியர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். பாதுகாப்பு பணி​யில் 300 கம்​பெனி துணை ராணுவப் படையினர் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்குப்பதிவு இயந்​திரங்​கள், 75 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள், விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்பட உள்​ளன. வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் வேட்​பாளர்​களின் பெயர், வண்ணப் புகைப்​படம், கட்​சி​யின் சின்​னம் ஆகியவை பொருத்​தப்​பட்​டு, தேர்​தல் நடத்​தும் அதி​காரி​களின் கட்​டுப்பாட்​டில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன. இவை பலத்த பாது​காப்​புடன் நாளை (ஏப்​.22) வாக்​குச்​சாவடி வாரியாக அனுப்பி வைக்​கப்படுகின்றன.

‘அமைதி கால’ வழிகாட்டுதல்கள்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்​தலுக்கான பிரச்​சா​ரம் இன்று மாலை 6 மணி​யுடன் முடிவடைந்தது. இன்று மாலை 6 மணி முதல் வாக்​குப்​ப​திவு நாளான 23-ம் தேதி மாலை 6 மணி வரையி​லான 48 மணி நேர அமைதி காலத்​தில் அரசியல் கட்​சிகள் கடைபிடிக்​கவேண்​டிய வழிகாட்டுதல்களை இந்​திய தேர்​தல் ஆணை​யம் வெளியிட்​டுள்​ளது.

ஏப்​.21-ம் தேதி மாலை 6 மணி முதல் 23-ம் தேதி மாலை 6 மணி வரை தேர்​தல் தொடர்​பான எந்​தவொரு பொதுக் கூட்டத்​தையோ, ஊர்​வலத்​தையோ யாரும் ஒருங்​கிணைக்கவோ, நடத்​தவோ, அதில் பங்​கேற்​கவோ கூடாது.

தேர்​தல் தொடர்​பான விவ​காரங்​களை திரைப்​படம், தொலைக்​காட்​சி, வானொலி, குறுஞ்​செய்​தி, இணை​யம், வாட்​ஸ்​அப், ஃபேஸ்புக் போன்ற வலை​தளங்​கள் என எந்த வடிவி​லான தகவல் தொடர்பு மூல​மாக​வும் மக்​களின் பார்வைக்கு கொண்​டு​செல்​லக் கூடாது. மீறினால் 2 ஆண்டு சிறை அல்​லது அபராதம் அல்​லது இரண்​டும் விதிக்​கப்​படும்.

தொகு​திக்கு வெளியே இருந்து அழைத்து வரப்​பட்ட அனைத்து அரசி​யல் கட்சி நிர்​வாகி​கள், கட்​சிப் பணியாளர்​கள் என தொகுதி வாக்​காளர்​கள் அல்​லாத அனை​வரும் இன்று மாலை 6 மணிக்கு தொகு​தி​யை​விட்டு வெளி​யேற வேண்​டும்.

இன்று (ஏப்.21) முதல் ஏப்ரல் 23 வரை டாஸ்​மாக் கடைகள், பார்​களை மூடு​மாறும் தேர்​தல் ஆணை​யம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT