தமிழகம்

“உதயநிதியை இளம் பெரியார் எனக் கூறியிருப்பது கஷ்டகாலம்” - முன்னாள் அமைச்சர் காமராஜ்  

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: “துணை முதல்வர் உதயநிதியை இளம் பெரியார் என அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளது கஷ்டகாலம்” என அதிமுக முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் தஞ்சாவூர் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்டச் செயலாளர் பாரதிமோகன், மாநகரச் செயலாளர் ராமநாதன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக அதிமுக மாநில அமைப்புச் செயலாளரும், எம்எல்ஏவுமான இரா.காமராஜ் கூறியது: கும்பகோணம் வட்டம், கரூப்பூரில் 100-க்கணக்கான ஏக்கர் நிலம் ஆளும்கட்சிக்கு சொந்தமாக இருக்கிறது. அந்த நிலத்தை ஊக்குவிப்பதற்காக எம்எல்ஏ 10.58 ஏக்கர் மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் 2.24 ஏக்கர் நிலத்தை தானமாக பேருந்து நிலையம் அமைக்க வழங்கியுள்ளனர்.

மையப்பகுதியில் இயங்கி வரும் பேருந்து நிலையத்தை, 7 கி.மீ. தூரம் உள்ள கரூப்பூருக்கு இடமாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அங்கு இடமாற்றம் செய்தால், கும்பகோணத்துக்கு வரும் அனைவரும் அவதிக்குள்ளாவார்கள்.

மேலும், கமிஷனுக்காக மட்டுமில்லாமல், திமுகவினர், ரியல் எஸ்டேட் செய்வதற்கு அந்த நிலத்தின் தரத்தை உயர்த்துவதற்காக அங்கு பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய உள்ளனர். காவிரி டெல்டா மாவட்டம் பாதுகாப்பட்ட வேளாண் மண்டலம். ஆனால் இங்கு நன்செய் நிலத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான அவசியம் என்ன இருக்கிறது.

கரூப்பூர் பகுதியில் 1 சதுரடி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. அங்கு பேருந்து நிலையம் வருவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ள நிலையில் தற்போது 1 சதுரடி ரூ.1500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அங்கு 1 ஏக்கர் நிலம் ரூ. 1.50 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோன்ற செயல்களாக பாதிக்கப்படும் பொதுமக்களுக்காக அதிமுக குரல் கொடுக்கும். இதே போல், கரூப்பூரில் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்வதற்கு 2024, டிச.30-ல் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அப்போது ஏற்பட்ட பிரச்சினையால் அந்த தீர்மானம் நிறைவேறவில்லை. தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக போர்ஜரியாக தீர்மானக் கோப்புகளை தயாரித்து அனைத்திலும் மோசம் செய்துள்ளனர். 2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன்,  சட்டவிரோத செயலில் ஈடுபடுகின்ற நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

மேலும், தேர்தல் நேரங்களில் இங்கு இருக்கக் கூடிய பல பேர் இருக்க வேண்டிய இடம் வேறு. அந்த லிஸ்டில் இது போன்றவர்கள் இணைந்து கொண்டிருக்கின்றார்கள். இங்குள்ள அதிகாரிகள் இது போன்ற முறைகேட்டுக்கு துணை போகாதீர்கள். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல், கஞ்சா விற்பனை ஆகியவற்றிற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும். எனவே, பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான பலாபலனை நீங்கள் அடைந்தே தீர்வீர்கள் என்றார். தொடர்ந்து கண்டன முழக்கமிட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1992-ம் ஆண்டு தற்போது உள்ள பேருந்து நிலையத்தை கட்டமைக்கும் போதே 1000 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இன்று 400 பேருந்துகள் தான் வந்து செல்கின்றன. ஆனால் வேறு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அமைச்சர் ஏ.வ.வேலு, துணை முதல்வர் உதயநிதியை இளம் பெரியார் என பேசியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதெல்லாம் கஷ்டகாலம்.” என பதிலளித்து புறப்பட்டுச் சென்றார்.

SCROLL FOR NEXT