ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஒப்பந்தம் வழங்குமாறு அதிகாரியை நிர்ப்பந்தம் செய்த தவெக நிர்வாகியை அமைச்சர் ஆவதற்கு முன் ராஜபாளையம் எம்எல்ஏ ஜெகதீஸ்வரி செல்போனில் எச்சரித்துப் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் ராஜகுரு. இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் சாத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளராக இருந்தார். இவர் தனது மனைவி பெயரில் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் டாஸ்மாக் பார் உரிமம் பெற ராஜகுரு, லஞ்சம் கேட்பதாக கூறி பார் உரிமையாளர் சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், ராஜகுரு பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ராஜபாளையம் எம்எல்ஏ ஜெகதீஸ்வரி அமைச்சர் ஆவதற்கு முன் அவருடன் பேசிய ஆடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் ராஜகுரு வெளியிட்டார். அந்த ஆடியோ உரையாடல் வருமாறு:
அமைச்சர்: ராஜபாளையம் வட்டாட்சியரை சந்தித்தீர்களா?
ராஜகுரு: நான் செல்லவில்லை. லட்சுமணன்தான் வட்டாட்சியர், டிஎஸ்பியை சந்தித்து லட்டு கொடுத்து உள்ளார். நான் யூனியன் அலுவலகத்தில் ஒப்பந்த வேலை செய்து வருவதால் பிடிஓ, எம்எல்ஏ எப்போது வருவார் எனக் கேட்டார்.
அமைச்சர்: ஒன்றியப் பகுதியில் உள்ள ஒப்பந்தங்களை நீங்கள் தனக்கே வழங்க வேண்டும் எனக் கேட்டதாக எனக்கு தகவல் வந்தது.
ராஜகுரு: எந்த ஒன்றியச் செயலாளர் வந்து கேட்டாலும் எம்எல்ஏ வந்தபின் கேட்டுச் செய்யுங்கள் எனக் கூறிவிட்டேன். லட்சுமணன் பேசியதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார்.
அமைச்சர்: எனது தொகுதியில் உள்ள அதிகாரிகளிடம் எது பேசினாலும் காவல் துறையில் புகார் அளித்து விடுவேன். தொலைத்து விடுவேன்.
ராஜகுரு:ரூட் நிறைய இருக்கிறது. உங்களை நேரில் பார்த்து எல்லாத்தையும் சொல்கிறேன்.
அமைச்சர்: ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறேன் எனது தொகுதிக்குள் சாத்தூரைச் சேர்ந்தவர்களை அனுமதிக்க மாட்டேன்.
இவ்வாறாக அந்த உரையாடல் நீள்கிறது. இந்த ஆடியோ தற்போது வைராகி வருகிறது.