கிருஷ்ணசாமி
சென்னை: "என் அன்பு மாப்பிள்ளை பர்வேஸ் என்று அமைச்சர் பர்வேஸை, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொந்தம் கொண்டாடியது, அளவுக்கு மீறிய, மரபுக்கு மீறிய புகழுரையாகவே பார்க்கப்படுகிறது” என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், தன்னை அடையாளப்படுத்தி அமைச்சராக்கிய அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் ஐக்கியமாகியுள்ளார். 2011-ல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தை வசைபாடியும், ஜெயலலிதாவின் புகழ் பாடியும் அமைச்சரான பெருமகனார் தான் விஜயபாஸ்கர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இணைப்பு கூட்டத்திலும், இன்று புதுக்கோட்டை தவெக அலுவலகத் திறப்புப் பத்திரிகையாளர் சந்திப்பிலும், தனக்குப் பெரும் இடையூறாக இருக்கக்கூடியவர் எனக் கருதப்பட்ட தவெக அமைச்சர் பர்வேஸை புகழ்ந்து பாடினால் மட்டுமே தான் நுழைய முடியும் என்ற நிலையில், அவர் ஒரு படி மேலே சென்று, "என் அன்பு மாப்பிள்ளை பர்வேஸ்" என்று சொந்தம் கொண்டாடியது, அளவுக்கு மீறிய, மரபுக்கு மீறிய புகழுரையாகவே பார்க்கப்படுகிறது.
மாமன், மச்சான், மாப்பிள்ளை, அத்தான், பேரப்பிள்ளை போன்ற உறவு முறைகள், ரத்த உறவு முறைகள் நான்கு சுவற்றுக்குள், குடும்பத்திற்குள் வைத்து கொண்டாடப்பட வேண்டுமே தவிர, பொதுவெளியில் வெளிப்படுத்துவதும், அடையாளப்படுத்துவதும் அரசியல் நாகரிகமாகாது; அவை சாதிய மற்றும் மத ரீதியான குறியீடுகளாகவே கருதப்படும்’ என அவர் தெரிவித்துள்ளார்.