ராமேசுவரத்தில் நேற்று நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் உள்ளிட்டோர். | படம்: எல்.பாலச்சந்தர் |
ராமேசுவரம்: காசி ஆன்மிகத் தலைநகராக இருந்தாலும் தமிழ் இலக்கியங்கள் அங்கு ஓங்கி ஒலிக்கின்றன என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கூறினார். உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் ‘காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி-4.0 டிச. 2 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது.
இதன் நிறைவு விழா ராமேசுவரத்தில் நேற்று நடந்தது. இதில், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை தந்த புண்ணிய பூமியான ராமேசுவரத்தில் காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவைக் கொண்டாடுவது பெருமைக்குரியது. காசி ஆன்மிகத் தலைநகராக இருந்தாலும், நாலடியார், தேவாரம், திருவாசகம், கபிலரின் பக்திப் பாடல்கள் என தமிழ் இலக்கியங்கள் அங்கே ஒலிக்கின்றன.
முகலாய மன்னர்கள் காசி ஆலயத்தை அழித்தபோது தமிழகத்திலிருந்து (பாண்டிய நாடு) பெருந்திரளான வீரர்கள் அந்த மகத்தான புண்ணிய பூமியை மீட்டெடுக்கச் சென்றார்கள். நாட்டின் எந்த மூலையில் நமது தர்மத்துக்கும், நாட்டின் தன்மானத்துக்கும் இழுக்கு ஏற்பட்டால் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
மகாகவி பாரதி காசிக்கு சென்றது மட்டுமின்றி, காசி அமைச்சரமையில் புலவனாகவும் இருந்து தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார். பாரதி கண்ட கனவை நனவாக்கும் வகையில், பிரதமர் மோடி தனது தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
ஆளுநர் ஆர்.என் ரவி பேசும்போது, “நடப்பாண்டு காசி தமிழ் சங்கமம் ‘தமிழ் கற்கலாம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் கற்கின்றனர். தமிழ் மொழியின் பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும், வளர்ச்சிக்கும் பிரதமர் மோடியைப் போல வேறு யாரும் செய்ததில்லை.
இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது, “காசி தமிழ் சங்கமம் 4.0 மூலம் அனைவரும் தமிழ் கற்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாரதியாரின் கனவை பிரதமர் மோடி காசி தமிழ் சங்கமம் மூலம் நிறைவேற்றியுள்ளார்” என்றார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசும்போது, “காசிக்கும், தமிழகத்துக்கும் பல நூறு ஆண்டு பந்தம் தொடர்கிறது. காசியில் இருப்போர் ராமேசுவரம் செல்லவும், ராமேசுவரத்தில் இருப்போர் காசி செல்லவும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி உதவுகிறது” என்றார்.
நிகழ்ச்சியில் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, மண்டபம் ஹெலிபேடில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழக அரசு சார்பில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வரவேற்றார்.