புதுச்சேரி குமரகுருபள்ளத்தில் ரூ. 45.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 216 குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைத்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார் உள்ளிட்டோர். | படம்: எம்.சாம்ராஜ் |
புதுச்சேரி: ‘புதுச்சேரிக்கான மகத்தான திட்டங்கள் விரைவில் வரவுள்ளன. பிரதமர் மோடி வருகையின் போது அவை செயல்வடிவம் பெறும்’ என்று குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுவைக்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வருகை தந்தார். குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றபின் முதன்முறையாக புதுவைக்கு வருவதையொட்டி அரசு சார்பில் அவருக்கு பொது வரவேற்பு கம்பன் கலையரங்கில் அளிக்கப்பட்டது.
மேலும் ராஜ்பவன் தொகுதி குமரகுருபள்ளத்தில் ரூ.45.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 216 குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் விழாவும் நடந்தது. விழாவில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்றார். துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமை வகித்தார்.
முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு குடியிருப்புசாவியை குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழங்கி பேசியதாவது: தமிழ் மீது பிரதமர் மோடிக்கு உள்ள அளப்பரிய பாசத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
‘மனதின் குரல்’ நிகழ்வுக்காக வானொலியில் பேசியபோது, ‘தமிழ்தான் மிக தொன்மையான இந்திய மொழி’ என்பதை உலகுக்கு பறைசாற்றியுள்ளார். தமிழர்கள் மீதும் கொண்டுள்ள பாசத்தின் காரணமாக ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களை தமிழகத்துக்கும், புதுவைக்கும் அதிகமாக அளித்துள்ளார்.
இந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் புதுவையில் ஏழை மக்களுக்கு குடியிருப்புகளை கட்டி, தற்போது வழங்குகிறோம். 10 கோடி விவசாய மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு பென்ஷன் திட்டமாக இது விளங்குகிறது. புதுவை மாநிலம் மிகப்பெரும் வளர்ச்சி பெற வேண்டும்.
புதுவையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றி பிரதமருடன் துணைநிலை ஆளுநர் பேசியுள்ளார். அதைப்பற்றி ஆளுநர் என்னிடம் கூறினார். விரைவில் மகத்தான திட்டங்கள் புதுவைக்கு வர உள்ளன. பிரதமர் புதுவைக்கு வரும்போது அந்த திட்டங்களுக்கு செயல்வடிவம் கிடைக்கும்.
2026 புத்தாண்டு, அமைதி, செழிப்பு, ஆரோக்கியம், நம்பிக்கையை ஒவ்வொரு இல்லத்துக்கும் கொண்டுவந்து சேர்க்க இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.