தமிழகம்

இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியீடு: மதுராந்தகத்தில் 27, தாராபுரத்தில் 22 பேர் போட்டி

செய்திப்பிரிவு

சென்னை: இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், மதுராந்தகத்தில் 27 பேரும், தாராபுரத்தில் 22 பேரும் களத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் மதுராந்தகம் (தனி), தாராபுரம்(தனி) ஆகிய தொகுதிகளுக்கு அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள் ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் செப்.9-ல் தொடங்கி 16-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் அதிமுக, தவெக, திமுக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என மதுராந்தகத்தில் 48 மனுக்களும், தாராபுரத்தில் 51 மனுக்களும் தாக்கல் செய்ப்பட்டன.

இதையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செப். 17-ம் தேதி நடைபெற்றது. இதில் மதுராந்தகம் தொகுதியில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 28 மனுக்கள் ஏற்கப்பட்டன. மேலும், தாராபுரம் தொகுதியில் 30 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான இறுதிநாளான நேற்று சுயேச்சை,முக்கிய கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர். அதன்பின் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதன்படி மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி ராமன் (நாம் தமிழர்) உட்பட 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா (தவெக), சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), கார்த்திகா (நாம்தமிழர்), லட்சுமணன் (இந்தியகம்யூனிஸ்ட்) உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர் பட்டியல் இறுதியானதை அடுத்து இவ்விரு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் முடுக்கிவிட்டுள்ளன. அக்.9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் விடுமுறை: இந்நிலையில் இடைத்தேர் தலை முன்னிட்டு மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக். 6-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அக்.6-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும், இந்த 2 தொகுதிகளில் வாக்காளர்களாகப் பதிவு செய்திருந்து, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து தனியார் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கும் வாக்குப்பதிவு நாளான அக்.6-ம் தேதி ஊதியத்துடன் கட்டாய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தலைமைச் செயலர் எம்.சாய் குமார் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT