தவெக-வுக்குள் ஜான் ஆரோக்கியசாமியும், ஆதவ் அர்ஜுனாவும் இணைந்து புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக ‘லாபி’ செய்து வருவது ஆனந்த் தரப்பை நிலைகுலைய வைத்திருக்கிறது. இதன் உச்சக்கட்டமாக, சோழிங்கநல்லூரில் போட்டியிட விரும்பிய ஆனந்தை வலுக்கட்டாயமாக தி.நகருக்குத் தள்ளிவிடும் நிலைக்கு விஜய்யிடம் காய்களை நகர்த்தி வெற்றி பெற்றுவிட்டார்கள் ஜான் - ஆதவ் கூட்டணி என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
இதுகுறித்து தவெக உள்வட்டாரங்கள் பேசுகையில், “தவெக உருவாவதற்கு புஸ்ஸி ஆனந்த் அஸ்திவாரமாக இருந்ததால், அவருக்குக் கட்சியில் மிக முக்கியமான பொதுச்செயலாளர் பதவியைக் கொடுத்தார் விஜய். ஆனால், சமீபகாலமாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா இணைந்து ஆனந்துக்கு எதிராகத் திட்டமிட்டே காய்நகர்த்தி வருகிறார்கள்.
‘புஸ்ஸி ஆனந்துக்குக் கட்சியின் அரசியல் வியூகங்களைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை; மேடைகளில் பேசுவதற்கும் அவருக்குப் போதிய ஆளுமை இல்லை. அவருக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்தால் அது கட்சியின் ஒட்டுமொத்த தோல்விக்கே வழிவகுக்கும்’ என அவர்கள் விஜய்யின் காதுகளைக் கவ்வி வருகிறார்கள்.
இதனால் சமீபகாலமாக தவெக நிகழ்ச்சிகளில் ஆனந்துக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஆனந்த் தயாரித்த வேட்பாளர் பட்டியலை நிராகரித்த அந்தத் தரப்பு, ‘பாஜக-வுடன் கூட்டணி வைக்க ஆனந்த் விரும்புகிறார்’ என்கிற தகவலையும் பரப்பி வருவதாக ஆனந்த் தரப்பு கூறி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, சோழிங்கநல்லூரில் போட்டியிட விரும்பிய ஆனந்தை தி.நகர் தொகுதியில் முடக்கிவிட்டார்கள்.
ஆரம்பத்தில் ஆனந்த் எடுத்த ரகசிய சர்வேயில், சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம் என ரிசல்ட் வந்திருந்தது. தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி என்பதாலும், ஐடி ஊழியர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதாலும், அங்கு உறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை அமைப்புகள் வலுவாக இருப்பதாலும் அந்தத் தொகுதியையே ஆனந்த் மலைபோல நம்பியிருந்தார்.
மேலும், அங்கு இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் மீது தொகுதிக்குள் நிலவும் அதிருப்தியும், அதிமுக-வில் கே.பி.கந்தனுக்குப் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததும் தனக்குச் சாதகமாக அமையும் என ஆனந்த் கணக்குப் போட்டிருந்தார். ஆனால், ‘அங்கே சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் சரவணனை நிறுத்தினால்தான் சரியாக இருக்கும்; அவருக்குத்தான் மக்கள் ஆதரவு இருக்கிறது’ என ஆதவ் - ஜான் தரப்பு விஜய்யிடம் சொல்லியிருக்கிறது.
இதையடுத்து, அம்பத்தூர் தொகுதியைக் குறிவைத்து ஆனந்த் வேலை செய்தார். அங்குப் பட்டியலின மற்றும் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வசிப்பதால், அவர்கள் தவெக-வுக்கு வாக்களிப்பார்கள்; அதன் மூலம் எளிதில் வென்றுவிடலாம் என நம்பினார். ஆனால், அங்கேயும் ‘ஜே.சி.டி பிரபாகருக்கு வாய்ப்பு கொடுத்தால்தான் சரியாக இருக்கும்’ எனச் சொல்லி ஆனந்துக்கு செக் வைத்தது அந்தத் தரப்பு.
இறுதியில், ‘சென்னையில் திமுக பலமிழந்து இருக்கும் தொகுதிகளில் தி.நகரும் ஒன்று; அங்கு ஆனந்தை நிறுத்தினால் வெற்றி நிச்சயம் என எங்கள் சர்வே சொல்கிறது’ எனப் புதுக் கதையைச் சொல்லி ஆனந்தை தி.நகருக்குத் தள்ளிவிட்டிருக்கிறார்கள்.
ஆனால், தி.நகர் தொகுதியில் வெற்றி பெறுவது எவ்வளவு கடினம் என்பது இப்போதுதான் ஆனந்துக்குத் தெரியவந்திருக்கிறது. அங்கே திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ கருணாநிதி, உதயநிதி ஆதரவாளர் ராஜ அன்பழகன் ஆகியோர் சீட் பெற தீவிரமாக முயன்று வருகிறார்கள். கடந்த முறை நூலிழையில் வெற்றியைத் தவறவிட்ட அதிமுக-வின் தி.நகர் சத்யா கடும் சவாலாக இருப்பார்.
மேலும், பாஜக-வுக்குச் செல்வாக்குள்ள தொகுதி என்பதால் தமிழிசை, எஸ்.ஜி.சூர்யா, வினோஜ் பி செல்வம் எனப் பலமான வேட்பாளர்கள் களமிறங்கக் காத்திருக்கிறார்கள். இதனால் வெற்றிபெறுவது கடினம் என ஆனந்த் விரக்தியில் இருக்கிறார். விஜய்யைச் சந்தித்துப் பேசியும் பலன் கிடைக்காததால் அவர் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார்” என்றனர்.
இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், “நிர்வாகிகள் மூன்று பேருக்குள் பிரச்சினை இருப்பதாகச் சிலர் திட்டமிட்டு அவதூறான கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள். உண்மையில், தி.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதுதான் புஸ்ஸி ஆனந்தின் தனிப்பட்ட விருப்பமாக இருந்தது.
அந்த விருப்பத்தைத் தலைமையிடம் அவர் முறைப்படி தெரிவித்தார்; தலைவரும் அதற்குப் பச்சைக்கொடி காட்டியதையடுத்து, தற்போது அங்கு அவர் தீவிரமாகக் களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்திற்குள் எந்தவிதமான கோஷ்டி பூசலும் இல்லை,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.