சேலம்: சேலம், மதுரை, கோவை மாவட்டங்களில் கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ள பஸ் போர்ட் திட்டத்தை காலத்தின் தேவை கருதி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சேலம், கோவை, மதுரை மாவட்டங்களில் விமான நிலையத்தில் (ஏர்போர்ட்) உள்ளதைப் போல அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய “பஸ் போர்ட்” அமைக்கப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்காக 3 மாவட்டங்களிலும் இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், அடுத்து வந்த திமுக அரசு பஸ் போர்ட் திட்டத்தை கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டது. தற்போது, தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் கைவிடப்பட்ட சேலம், மதுரை, கோவை பஸ் போர்ட் திட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களான சேலம், மதுரை, கோவையில் தற்போதுள்ள பேருந்து நிலையங்கள் இடப்பற்றாக்குறை, சுகாதார சீர்கேடு, ஆக்கிரமிப்பு கடைகள் என பல வகைகளிலும் மக்கள் சிரமத்துடன் பயன்படுத்தும் நிலையே உள்ளது. பஸ் போர்ட் திட்டம் மூலம் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், எஸ்கலேட்டர்கள் மற்றும் இலவச வைஃபை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், குழந்தைகள் விளையாட இடம், பேருந்துகள் வருகை, புறப்பாடு குறித்த நேரலைத் திரைகள் உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கும். பஸ் போர்ட் திட்டத்துக்கு மத்திய அரசு 40 சதவீதம் நிதி உதவி வழங்குகிறது.
கோவையில் கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு நிர்வாகக் காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் போர்ட் திட்டம், தற்போது புதிய மாற்றங்களுடன் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் வெள்ளலூர் பகுதியில் சுமார் 61.62 ஏக்கர் பரப்பளவில் இந்த முனையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அதேபோல, சேலம் மாநகரின் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் 60 ஏக்கரில் பஸ் போர்ட் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.1,600 கோடி திட்டமிடப்பட்டு, இத்தொகையில் அரபிக் கல்லூரி முதல் அயோத்தியாப்பட்டணம் வரையிலான ரிங் ரோடு திட்டமும் அடங்குவதாக இருந்தது. இதன் மூலம் பெங்களூரு மற்றும் சென்னை பேருந்துகள் நகருக்குள் வராமல் நேரடியாக பஸ் போர்ட்டை அடையும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டம் முடங்கியுள்ளது.
இதுபோல, மதுரையில் கரடிக்கல், கே. புதுப்பட்டி, மேலக்குயில்குடி, அம்பலகாரன்பட்டி மற்றும் மாட்டுத்தாவணியின் பின்புறம் என 5 இடங்கள் பஸ் போர்ட் திட்டத்துக்காக பரிசீலிக்கப்பட்டன. சுமார் 50 முதல் 60 ஏக்கர் நிலப்பரப்பில் பஸ் போர்ட் திட்டம் அமைக்க ஆயத்தப்படுத்தப்பட்ட நிலையில், அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பல்வேறு அரசியல் காரணங்களால் முடங்கியுள்ள பஸ் போர்ட் திட்டத்தை தவெக அரசு செயல்படுத்த வேண்டும். மக்கள் நெருக்கம், போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.