மதுரை வைகை தென்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு காளையை பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் உரிமையாளர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
மதுரை: மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் பிரத்யேக பயிற்சிகள் அளித்து தயார் செய்து வருகிறார்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. இப்போட்டிகளின்போது வாடிவாசல்களில் காளைகளை அவிழ்ப்பதையே ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பெருமையாக கருதுகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் போட்டிகள் நடைபெறும். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, திருச்சி போன்ற தென்மாவட்டங்களில் காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகளைத் தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் காளைகளுக்கு போட்டிகளில், நின்று விளையாடுவதற்கும், திமில்களைப் பிடித்து அடக்கப் பாயும் மாடுபிடி வீரர்களை நெருங்கவிடாமல் பிரத்யேகப் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
செயற்கை வாடிவாசல் அமைத்தும், மண்ணை குவித்து வைத்தும், கொம்புகளைக் கொண்டு குத்தவிடுவது, நீச்சல் பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றை காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் வழங்குகின்றனர்.
காளைகளின் உடல் திடமாக இருக்கப்பருத்திக் கொட்டையை அரைத்துக் கொடுக்கின்றனர். இது தவிர துவரை, உளுந்து தோலை தண்ணீரில் ஊறவைத்துக் கொடுக்கின்றனர். களத்தில் காளைக்கு இளைப்பு வராமல் இருக்க தலைச்சுருளி வேரையும், திடகாத்திரமாக இருக்க குமுட்டிக் காயையும் அரைத்துக் கொடுக்கின்றனர்.
களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி வீரர்களை விரட்டி அடிக்கவும், மிரட்டி துரத்தவும் காளைகள் தயாராகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பெண்களும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து போட்டிகளில் களமிறக்குகின்றனர்.
அதனால், நடப்பாண்டு காளை வளர்ப்பில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிராமங்களில் உள்ள விவசாயிகள் முதல் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், விஐபிக்கள் வரை காளைகளை வளர்த்து போட்டிகளில் பங்கேற்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இது குறித்து அரசு கால்நடை மருத்துவர் மெரில்ராஜ் கூறியதாவது: காளைகள் வாடிவாசல் முன் நின்று விளையாடுவதைப் பொறுத்துதான் அதன் விலை மதிப்பிடப்படுகிறது.
ரூ.50 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு சந்தைகளில் விலை மதிப்பிடப்படுகிறது. இதற்காக, சிறு வயதிலே கன்றுக்குட்டிகளை வாங்கி, காளை உரிமையாளர்கள் பயிற்சி வழங்கி ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர்.