தமிழகம்

தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ், கருணைத் தொகை வரவு

அனலி

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 1,06,001 பணியாளர்களுக்கு, 2025-2026-ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.167.12 கோடி, அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று (02.11.2026) வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

8 அரசு போக்குவரத்து கழகங்களின் 21,333 பேருந்துகள் 10,172-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி போக்குவரத்து சேவையினை தினசரி 2.18 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கி வருகின்றது.

இதில் 72% பயணிகள் கட்டணமில்லா அல்லது சலுகை கட்டணத்தில் பயணிக்கின்றனர். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பங்களிப்பு இன்றியமையததாகும்.

போக்குவரத்துக் கழகங்களின் பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் முதல்வரின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 1,06,001 பணியாளர்களுக்கு, 2025-2026-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகையாக ரூ.167.12 கோடி அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று (02.11.2026) வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

அதன்படி, 1. லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

2. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

3. ஒதுக்கக்கூடிய உபரித் தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் “சி” மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

4. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.

5. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும்.

6. தமிழ்நாடு நுகர்பொருள் வாணியக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000/- கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT