தமிழகம்

மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

கி.மகாராஜன்

மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு மும்பையிலிருந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 43 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று காலை நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கியது. போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிமன்ற மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மின்னஞ்சல்கள் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது மும்பையில் இருந்து வந்த மின்னஞ்சலில், மும்பை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் போக்சோ வழக்கு விசாரணை தாமதத்தை கண்டித்தும், திருப்பரங்குன்றம் தீபம் வழக்கை கண்டித்தும் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு பெட்டி வைக்கப்பட்டிருப்பதாகவும், குண்டு வெடிப்பில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுமாறும் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற கட்டிடத்திலிருந்து நீதிபதிகள், ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

போலீஸார் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் கருவியுடன் வந்து முதலில் போக்சோ நீதிமன்றத்திலும் பிறகு மற்ற நீதிமன்றங்களிலும் சோதனை நடத்தினர். பின்னர் வெடிகுண்டு இருப்பதாக கூறப்பட்டது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மதுரை நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர்கள் அதிகளவில் இல்லை. வெடி குண்டு புரளியால் மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது. அண்ணாநகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT