சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பாஜக சார்பில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை: திமுகவின் பிடியில் இருந்து பிஎல்ஓ-க்களை காப்பாற்ற வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான கள நிலவரத்தை ஆய்வு செய்யும் கூட்டம் தமிழக பாஜக சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. இதற்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், பாஜக முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி,அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: ஆளும்கட்சியின் பிடியில் இருந்து பிஎல்ஓ-க்களை காப்பாற்ற வேண்டும். நேர்மையான முறையில் எஸ்ஐஆர் நடக்க வேண்டும்.
இந்தியாவில் சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் தான் அதிகமாக இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக இருந்தும் கூட, அதிக சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தை திறந்தார்கள்.இதனால்தான் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.
தமிழ் பல்கலைக்கழகம்: மத்திய கல்வி அமைச்சகத்திடம் பேசி பிஹார், கவுகாத்தி, டெல்லியிலும் புதிய தமிழ் பல்கலைக்கழகத்தை திறக்க திமுகவிடம் கூறி வருகிறோம். செத்துப்போன மொழி என சொல்லும் உதயநிதியின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதுவரை முதல்வரும், துணை முதல்வரும் அவர்கள் செய்த சாதனையை சொல்லவில்லை என்பதிலேயே அவர்கள் தேர்தலை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள் என தெரிகிறது.
நெல் கொள்முதல் நிலையங்களை கட்ட மத்திய அரசு கொடுத்த ரூ.360 கோடியை திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது. நெல் ஈரப்பதத்துக்கு மாநில அரசின் தவறுதான் காரணம். மெட்ரோ ரயில் விவகாரத்தை பொறுத்தவரை, வேண்டுமென்றே தவறான தரவுகளை தமிழக அரசு கொடுத்திருக்கிறது.
நிலம் கையகப்படுத்து போன்ற எந்த விவரங்களும் அதில் இடம்பெறவில்லை. எனவே, பல கேள்விகளை மத்திய அரசு கேட்டுள்ளதே தவிர, மெட்ரோ திட்டத்தை நிராகரிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.