தமிழகம்

பாபநாசம் அருகே தமிழக முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டிய 8 விவசாயிகள் கைது

சி.எஸ். ஆறுமுகம்

பாபநாசம்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே தமிழக முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டிய 8 விவசாயிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும் புதிய நிர்வாகம் வட்டியுடன் வழங்க வேண்டும்.

          

தங்களின் பெயரில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்து, சிபில் ஸ்கோர் பிரச்சினையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும்,

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், சாராயம் தயாரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்திக் கடந்த 2022ம் ஆண்டு நவ.30ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கும்பகோணம் வட்டம், தாராசுரம் புறவழிச்சாலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் பங்கேற்க முதல்வர் கும்பகோணம் வருவதாக தெரியவந்தது. முதல்வரின் வருகையையொட்டி, முதல்வர் ஸ்டாலின் முன்னதாக போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, மாநாட்டிற்காக தஞ்சாவூரில் இருந்து நான்கு வழிச்சாலை வழியாக கும்பகோணத்திற்கு இன்று (ஜன.28) மதியம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாகனத்தில் வந்தார். அப்போது, பாபநாசம் வட்டம் வேம்புக்குடி டோல் கேட் அருகில் மறைந்திருந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகள், கரும்பு விவசாயிகள் சங்க உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் திடிரென சாலையோரம் வந்து நின்று கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையறிந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட செந்தில் குமார், சரபோஜி, கலையரசன், மோகன் தாஸ், முருகன், குமரேசன், அருண் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இதனால் அச்சாலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT