எஸ்.ஜி.சூர்யா | கோப்புப்படம் 
தமிழகம்

பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்யக்கூடாது: ஐகோர்ட்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்த உயர் நீதிமன்றம், அதுவரை 4 பேரையும் கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

எஸ்.ஜி. சூர்யா உள்ளிட்ட பாஜகவினர் 4 பேர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிபதி ராஜசேகர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தின் படப்பிடிப்பு அரங்கில், கடந்த ஜனவரி 9 ம் தேதி அரசியல் சார்ந்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாஜக சார்பில் மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யாவும், திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மற்றும் திமுக ஆதரவு ஊடகவியலாளரான செந்தில் வேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது ஏற்பட்ட கருத்து மோதலை தொடர்ந்து, பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ் ஜி.சூர்யா மீது செந்தில் வேல் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் பாட்டில், கத்தி மற்றும் ஆயுதங்கள் எடுத்து வந்து கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த எஸ்.ஜி.சூர்யா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 10 ம் தேதி, எஸ்.ஜி.சூர்யா, பாரதி கண்ணன், விக்னேஷ், மற்றும் பத்மாநாபன் உள்ளிட்ட பாஜகவினர் மீது வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 4 பாஜகவினர் முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், தங்களை தாக்கிய செந்தில் வேல் உள்ளிட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், தன் மீதும் தன்னுடன் வந்த பாஜகவினர் மீதும் அரசியல் உள் நோக்கத்துடன் பொய்யான வழக்கை காவல்துறை பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணைக்கு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், காவல்துறை உள் நோக்கத்துடன் தங்களை கைது செய்ய வாய்ப்பிருப்பதால் இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக எடுக்க வேண்டும் என நீதிபதி ராஜசேகர் முன்பு ஆஜரான உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர் சி பால்கனகராஜ் கோரிக்கை விடுத்தார்

இதனைத் தொடர்ந்து இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன்பு இன்று மாலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராகி மனுதாரர் மீது வேண்டுமென்றே பழிவாங்கும் வகையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத ஒரு பெண்மணி இடம் இருந்து புகாரை பெற்று பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. எனவே இந்த வழக்கின் விசாரணையை பொங்கல் விடுமுறைக்கு பிறகு தள்ளி வைப்பதாகவும் அதுவரை எஸ் ஜி சூர்யா உள்பட 4 பேரையும் கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT