உதயநிதி ஸ்டாலின்

 
தமிழகம்

“தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கும் பாஜகவின் சூழ்ச்சி வெற்றி பெறாது” - உதயநிதி ஆவேசம்

செய்திப்பிரிவு

‘தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்துவிடலாம் என்று மத்திய பாஜக நினைக்கிறது. தமிழ்நாட்டில் கால் பதிக்க நினைக்கும் பாஜகவின் சூழ்ச்சிகள் இங்கு என்றுமே வெற்றி பெறாது’’ என திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை அருகே முதலிபாளையம் பகுதியில் கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது:

          

கடந்த மக்களவைத் தேர்தல் போல், தற்போது மீண்டும் களத்தில் இளைஞர் அணி முன்னெடுப்பை நாம் தொடங்கி, இந்தச் சட்டப் பேரவைத் தேர்தலிலும் 100 சதவீதம் வெற்றியைப் பெற்றாக வேண்டும். கோவையை யார், யாரோ அவர்களின் கோட்டை என்று இன்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கோவை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த மேற்கு மண்டலமும் திமுக-வின் கோட்டை என நாம் நிரூபிக்க வேண்டிய தேர்தல் இது.

கடந்த 5 ஆண்டுகளாக மக்களைத் தினமும் சந்திக்கக்கூடிய ஒரு முதல்வர் மு.க.ஸ்டாலின். விடியல் பயணத் திட்டம் மூலம் 920 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். காலை உணவுத் திட்டம் மூலம் நாள்தோறும் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தின் மூலம், பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்காக மாதம் ரூ.2 ஆயிரத்தை 12 ஆயிரம் குழந்தைகள் பெறுகின்றனர்.

கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகள் நவீனப்படுத்துதல் தொடங்கி விளாங்குறிச்சியில் ரூ.115 கோடி மதிப்பீட்டில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா கட்டிடம், ரூ. 800 கோடி மதிப்பீட்டில் கோவை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பகுதிக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், ரூ. 165 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா, ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பெரியார் நூலகம் என இந்த மாவட்டத்துக்குத் தேவையான திட்டங்களை நம் அரசு செய்து கொடுத்துள்ளது. இதற்கெல்லாம் மத்திய அரசு நமக்கு உதவவில்லை.

கல்வி உரிமை, நிதி உரிமை என அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது. பாசிச பாஜக-வை துணிச்சலாக எதிர்த்து நிற்கக்கூடிய முதுகெலும்புள்ள ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இன்று நான்கு அடிமைகளைப் பிடித்து வைத்துக் கொண்டால், தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்துவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. தமிழ்நாட்டில் கால்பதிக்க நினைக்கும் பாஜகவின் சூழ்ச்சிகள் இங்கு என்றுமே வெற்றி பெறாது.

வாரத்துக்கு ஒருமுறை டெல்லிக்குச் சென்று அமித் ஷா வீட்டின் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நிற்கிறார். அதிமுக-வின் தலைமையகம் சென்னை. பழனிசாமியின் தலைமை அலுவலகம் டெல்லி. திமுக அண்ணா உருவாக்கிய கட்சி. இன்று அதிமுக என்பது அமித் ஷாவுக்கு அடிமையாக இருக்கக்கூடிய கட்சி. எஜமானர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச் சென்றாக வேண்டும்.

இந்த முறை தேர்தலில் ‘பத்து தோல்வி பழனிசாமி’, ‘படுதோல்வி பழனிசாமி’ ஆவது உறுதி. அதிமுக என்பது டெல்லி மேக். எத்தனை அணிகள் வந்தாலும் திமுக தான் சாம்பியன். இப்போது கொள்கையற்ற கூட்டம் ஒன்று உருவாகியுள்ளது. அவர்களிடம் பேசி அவர்களை கொள்கை மயப்படுத்துகிற முயற்சியில் ஈடுபடுவோம். ஒவ்வொரு வீட்டிலும் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள அனைத்து வாக்காளர்களுமே இளைஞர் அணியின் இலக்கு. கடந்த முறை கோவையில் தவறவிட்ட இடங்களை, இந்த முறை மீட்டெடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்திலும் 100 சதவீத வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT