சேலத்தில் மசூதியில் தொழுகை நடத்தச் சென்ற பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்மை போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலை நகர் பகுதியில் நடுரோட்டிலேயே தொழுகையில் ஈடுபட்டார்.
சேலம்: சேலத்தில் மசூதியில் தொழுகை நடத்தச் சென்ற பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்மை போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தியதால், நடுரோட்டில் அமர்ந்து அவர் தொழுகையில் ஈடுபட்டார்.
வேலூரைச் சேர்ந்தவர் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம். இவர், சேலம் சூரமங்கலம் அருகே நெடுஞ்சாலை நகரில் வசிக்கும் நண்பர் ஒருவரை பார்க்க நேற்று காலை 11 மணிக்கு சென்றார். பின்னர் பிற்பகலில் ஐந்து ரோடு அருகே உள்ள மசூதிக்கு தொழுகைக்கு செல்ல முயன்றார். அப்போது, வேலூர் இப்ராஹிம் தொழுகை நடத்த வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம் என சிலர் வாட்ஸ்அப்-ல் தகவல் பரப்பினர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, சேலம் மாநகர காவல் உதவி ஆணையர்கள் பரவாசுதேவன், ரமலி ராமலட்சுமி தலைமையிலான போலீஸார் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகருக்கு சென்று இப்ராஹிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மசூதிக்கு சென்று கட்டாயம் தொழுகை செய்வேன் என அவர் கூறியுள்ளார். மசூதிக்கு சென்று தொழுகை நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறி இப்ராஹிம்மை போலீஸார் தடுத்தனர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இப்ராஹிம் மசூதிக்கு செல்வதை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர் நெடுஞ்சாலை நகரில் நடுரோட்டில் ஜமக்காலத்தை விரித்து தொழுகையில் ஈடுபட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “மசூதிக்கு சென்று தொழுகை நடத்த விடாமல் தொடர்ந்து வேண்டுமென்றே சிலர் மிரட்டல் விடுக்கின்றனர். கடந்தமுறை சேலம் வந்தபோது, சிலர் மிரட்டல் விடுத்தது குறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து, சேலம் மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இப்போது மீண்டும் எனக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீஸி்ல் புகார் அளிக்க உள்ளேன்” என்றார். வேலூர் இப்ராஹிம் மசூதிக்கு செல்ல எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.