கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் நின்று வெற்றிபெற்ற பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், இம்முறை அந்தத் தொகுதி தனக்கு பாதுகாப்பாக இருக்காது என்று தெரிந்ததாலோ என்னவோ, கோவை தெற்கை விட்டு விட்டு கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டதால், கோவை தெற்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றது. அப்போது நிலவிய மும்முனைப் போட்டியில், கமல்ஹாசனைத் தோற்கடித்து வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு மூன்றாமிடமே மிஞ்சியது.
கடந்த 2016-ல், கோவை தெற்கில் அதிமுக வேட்பாளரான அம்மன் கே.அர்ஜுனன் வாகை சூடினார். ஆனால், 2021 தேர்தலில் வானதிக்காக கோவை தெற்கை பாஜக விரும்பிக் கேட்டதால் அந்தத் தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு கோவை வடக்கில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார் அம்மன் அர்ஜுனன். இந்த நிலையில், இப்போது மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணிக்குள் வந்துவிட்டதால் கடந்த முறையைப் போல் கோவை தெற்கில் எளிதாக வெல்ல முடியுமா என்ற சந்தேகம் வானதி சீனிவாசனுக்கு வந்துவிட்டது. அதனால், கோவை வடக்கு தொகுதிக்கு மாறும் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
இதற்கான முன்னோட்டமாக கோவை வடக்கு தொகுதியை மையப்படுத்தி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்திருக்கும் வானதி, இத்தொகுதிக்கு உட்பட்ட வடவள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை அழைத்து வந்து, தனது தொகுதி மாறும் எண்ணத்தை சூசகமாக வெளிப்படுத்தினார். இந்தத் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்களாக ஏற்கெனவே இரண்டு நபர்களை வானதி நியமித்துவிட்டதாகவும் தகவல் இருக்கிறது.
வானதிக்கு இப்படியொரு திட்டம் இருப்பதைத் தெரிந்து கொண்டு கோவை வடக்குத் தொகுதியின் தற்போதைய அதிமுக எம்எல்ஏ-வான அம்மன் அர்ஜுனன் மீண்டும் தனது பழைய தொகுதிக்கே மாறுவதற்கான வேலைகளை அவர் பங்கிற்கு பார்க்க ஆரம்பித்து விட்டார். கோவை தெற்கில் போட்டியிட கட்சி தலைமையிடம் விருப்ப மனு கொடுத்திருக்கும் அர்ஜுனன், தெற்கில் நடக்கும் கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி தனது பழைய நட்புகளைப் புதுப்பித்து வருகிறார்.
சிறுபான்மையின வாக்குகள் கணிசமாக இருக்கும் கோவை தெற்கு தொகுதியை பெரும்பாலும் கூட்டணிக் கட்சிக்கே ஒதுக்கிவிடுவதால் சோர்ந்து போயிருக்கும் திமுக-வினர், இம்முறை கோவை தெற்கில் உதயசூரியனே உதிக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அவர்களின் இந்தக் கோரிக்கைக்கு திமுக மண்டலப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜியும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
அப்படி ஒருவேளை கோவை தெற்கு திமுக-வுக்கு ஒதுக்கப்பட்டால் மாநில மாணவரணிச் செயலாளர் ராஜீவ்காந்தி, ஐடி விங் மாநில இணைச் செயலாளர் மகேந்திரன், துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், பொதுக்குழு உறுப்பினர் மு.ம.ச.முருகன் என ஒரு பெரும்படையே போட்டியிடத் தயாராய் நிற்கிறது. இவர்களுக்கு மத்தியில், கடந்த முறை நூலிழையில் தவறவிட்ட தொகுதி என்பதால் மக்கள் நீதி மய்யமும் கோவை தெற்கை தங்களுக்கான விருப்பப் பட்டியலில் வைத்திருக்கிறது.