பாஜக பேச்சாளர்கள் பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை, தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். | படம்: எம்.முத்துகணேஷ் |
பல்லாவரம்: திரைப்பட பாணி அரசியலை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான களப்பணியில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் தெரிவித்துள்ளார்.
பல்லாவரத்தில் பாஜக சார்பில் பேச்சாளர்களுக்கான பயிற்சி பட்டறை நேற்று காலை நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் பாஜக மூத்த தலைவர் தமிழிசை, தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது தமிழிசை கூறியதாவது: கர்நாடக எல்லையில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது மனிதநேயமற்ற செயல். காவிரி நீரை வழங்குவதிலும், எல்லைப் பகுதியில் தமிழர்களின் பாதுகாப்பிலும் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால், முதல்வரின் முகாம் அலுவலகப் பணிகளுக்கான டெண்டரில் முறைகேடுகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் கூறும்போது, ``பாஜக தனிநபர்களை மையமாகக் கொண்ட கட்சி அல்ல, கொள்கை மற்றும் வலுவான அமைப்பை அடிப்படையாகக் கொண்டு 365 நாட்களும் செயல்படும் கட்சியாகும். கட்சியின் கொள்கை, வரலாறு மற்றும் மக்கள் பணிகளை தொண்டர் களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
வரும் தேர்தல்களில் தமிழக அரசியலில் பாஜகவலுவான மாற்று சக்தியாக உருவெடுக்கும். தமிழக அரசு கொள்கை மற்றும் உறுதியான நோக்கமின்றி செயல்படுகிறது. திரைப்பட வசனங்களைப் போன்று அரசாங்கத்தை நடத்த முடியாது. திரைப்பட பாணி அரசியலை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான களப்பணியில் அரசு கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.