தமிழகம்

சூடாகும் தேர்தல் களம்... சுத்துப் போடத் தயாராகும் பாஜக!

வே.கோபாலகிருஷ்ணன்

வாரிசுகளுக்கு வாய்ப்புக் கேட்டு வரிசை கட்டி நிற்கும் தலைவர்கள், தமது ஆதரவாளர்களுக்காக இப்போதே தொகுதிக்கு 'துண்டு' போட்டு வைக்கும் மூத்த முன்னோடிகள், கூடுதல் இடங்களைக் கேட்டு குடைச்சல் கொடுக்கும் கூட்டணித் தோழமைகள் என அண்ணா அறிவாலயத்தில் பறக்கும் அனலுக்கு மத்தியில் பாஜக-வும் தன் பங்கிற்கு திமுக-வுக்கு எதிரான விவகாரங்களை தூசு தட்டி எடுத்து குடைச்சல் கொடுக்கத் தயாராகி வருகிறது.

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும், அதிமுக-வின் சைதை துரைசாமியும் மோதினர். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து சைதை துரைசாமி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். ஆனால், “ஸ்டாலினுக்கு எதிரான புகார்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். இதை எதிர்த்து சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

          

ஆண்டுக் கணக்கில் நிலுவையில் இருந்த இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை அண்மையில் முடிக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் ஸ்டாலினுக்கு நிம்மதி தரும் விதமாகவே மனுதாரர் தரப்பை கேள்வி எழுப்பி இருந்தாலும், தேர்தல் நேரத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு எப்படிப் போகுமோ என்ற கவலை அறிவாலயத்தை வதைத்துக் கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு என்பதால் பாஜக மேலிடமும் இதை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இதேபோல், அமைச்சர் கே.என்.நேருவைச் சுற்றியும் சர்ச்சைகள் வட்டமடிக்கின்றன. நகராட்சி நிர்வாகத்தில் பணியிடங்களை நிரப்புவதில் நேரு தரப்பில் லஞ்சம் பெறப்பட்டதாக கடந்த 2025-ல்அமலாக்கத் துறை தமிழக டிஜிபி-க்குக் கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில், நேரு மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை வழக்குத் தொடர்ந்தார்.

இதைவிசாரித்த நீதிமன்றம், "அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளதால், தாமதமின்றி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்" என உத்தரவிட்டது. வழக்குப் பதிவானால் கொஞ்சமும் தாமதிக்காமல் மத்திய அரசின் அமலாக்கத்துறை தங்களைத் தேடி புறப்பட்டு வந்துவிடும் என்பதால் நேரு முகாமும் இப்போது உச்சகட்ட உதறலில் இருக்கிறது.

இந்த நெருக்கடிகள் குறித்து மதுரையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "நாங்கள் பார்க்காத மிசாவா,தடாவா? ஆட்சி, பதவி ஏன், உயிரே போனாலும் கவலைப்பட மாட்டோம். எதிர்க்கட்சிகளிலேயே திமுக-வினர் மீதுதான் அதிகமான ரெய்டுகள் நடக்கின்றன. சிபிஐ, இடி, ஐடி என எந்தச் சித்து விளையாட்டுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம்" என ஆவேசமாக முழங்கினார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "மக்கள் மத்தியில் திமுக-வுக்கு எதிரான எதிர்ப்பு அலை இல்லை. எனவே,செயற்கையான காரணங்களை உருவாக்கி பாஜக அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியோ, "எல்லாவற்றிற்கும் பாஜக-தான் காரணம் எனச் சொல்வது தவறு. நீதிமன்றத்தில் வழக்குகள் முகாந்திரம் இருந்தால் தான் விசாரிக்கப்படுகின்றன. திமுக-வினரின் இத்தகைய பேச்சுகள் பாஜக மீதுஅவர்களுக்கு இருக்கும் பயத்தையே காட்டுகிறது" என்கிறார்.

யார் என்ன சொன்னாலும், “திமுக-வை ஒழிக்க வேண்டும்” எனப் பேசி வரும் பாஜக தலைவர்கள், இந்தத் தேர்தலில் அந்தக் கட்சியை அத்தனை எளிதில் ஜொலிக்கவிட்டுவிட மாட்டார்கள் என்பதற்கான அறிகுறிகள் ஆங்காங்கே தென்பட ஆரம்பித்துவிட்டன.

SCROLL FOR NEXT