நாராயணன் திருப்பதி 

 
தமிழகம்

காங்., திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜக சாடல்

செய்திப்பிரிவு

சென்னை: மகளிர் இடஒதுக்கீட்டுடன் நேரடியாகத் தொடர்புடைய தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதன் மூலம் திமுகவும், காங்கிரஸும் தாங்கள் பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன என்று தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.

இது குறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படும். தென் மாநிலங்களின் பலம் குறையும் என்று ஒரு பொய்யான அச்சத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களாக விதைத்து வந்தார்.

மத்திய அரசின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி மிகத் தெளிவாக விளக்கிய பிறகும், இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடவே ஸ்டாலின் முயற்சிக்கிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியின் ஊழல்கள், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைக்க ‘மாநில உரிமை’ என்ற போர்வையில் இத்தகைய போலிப் பிரச்சாரங்களை அவர் செய்து வருகிறார்.

தற்போது தமிழகத்துக்கான எம்.பி. தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆக உயரும் என்ற செய்தி வெளிவந்துள்ள நிலையில், அதை வரவேற்க மனமின்றி திமுக - காங்கிரஸ் கூட்டணி எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.

2026-ம் ஆண்டில் தொகுதி மறுவரையறை செய்வது என்பது கடந்த 2001-ம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்ட ஒன்று. மேலும், தொகுதி மறுவரையறை என்பது மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டுடன் நேரடியாக தொடர்புடையது. இதை எதிர்ப்பதன் மூலம் திமுகவும், காங்கிரஸும் தாங்கள் பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.

தன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்குக்கூட அரசியலில் உரிய அங்கீகாரம் வழங்காமல், வாரிசு அரசியலில் மகனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்டாலின், பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றிப் பேச தகுதியற்றவர். அவருக்கு துணிச்சல் இருந்தால் ‘மகளிர் இடஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கிறோம்’ என்று நேரடியாக சொல்லட்டும். தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT