முதல்வர் ஸ்டாலின் | படம்: ஜெ.மனோகரன்
திருப்பூர்: “பெண்களின் வாழ்வாதாரத்துக்குத் துணையாக இருந்த மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தை இன்றைக்கு இழுத்து மூடியிருக்கிறார்கள். பாஜகவின் இந்த நடவடிக்கை பெண்களுக்கு முற்றிலும் விரோதமானது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற பெயரிலான திமுக மகளிரணியின் மேற்கு மண்டல மாநாட்டில் கலந்துகொண்டு பேசியது: “கருப்பு – சிவப்புக் கடல் போன்று லட்சக்கணக்கான பெண்கள், தாய்மார்கள், இப்படி ஒரே இடத்தில் கூடுயதாக வரலாறே இருக்காது. உங்களைப் பார்க்கும்போதே, பவர்ஃபுல்லாக இருக்கிறது. பவர்ஃபுல்லாக மட்டுமல்ல, வுமன் பவரால் திமுக மீண்டும் பவருக்கு வரப்போவதும் உறுதியாகி இருக்கிறது.
இப்படியொரு பவர்ஃபுல் மாநாட்டுக்கான பணிகளை எல்லாம் முழுமையாகத் தன் தோளில் சுமந்து, மிகச் சிறப்பாக, வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியிருக்கும் ஆற்றல்மிக்க செயல்வீரர் செந்தில் பாலாஜிக்கு முதலில் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இந்த மாநாட்டுக்குத் தலைமையேற்றிருக்கும் திமுக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிக்கும், அவருக்குத் துணையாக உடன் நிற்கும் மகளிர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்.
கனிமொழியைப் பொறுத்தவரை, கவிஞர் - பத்திரிகையாளர் - மரபுக் கலைகளில் ஆர்வம் கொண்டவர் என்று பன்முகத் திறமை கொண்டவர். எப்போதுமே, புன்னகை மாறாத முகத்துடன் இருப்பார். இப்போதுகூட பாருங்கள். அதேவேளையில், நாடாளுமன்றத்தில் உரிமைக் குரல் எழுப்பும்போது, கர்ஜனை மொழியாகவும் சீறுவார்.
அதுமட்டுமல்ல, தேர்தல் என்று வந்துவிட்டாலே, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான் ‘ஹீரோ’. அந்த ‘ஹீரோ’வையே தயாரிக்கும் பொறுப்பை இப்போது அவர் ஏற்றிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அந்தப் பணியை அவர் செய்தபோது, முழுமையான வெற்றி பெற்றோம். வரும் சட்டமன்றத் தேர்தலிலும், மாபெரும் வெற்றியைப் பெறப் போகிறோம். அது உறுதி.
ஒரு கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 சகோதரிகளுக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை உரிமைத் தொகையாக கொடுக்கிறோம். இந்த உரிமைத் தொகை பல பெண்களுக்குச் சுயமரியாதையை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
முதலமைச்சராக நான் போட்ட முதல் கையெழுத்தே பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்யும் திட்டத்திற்குத்தான். இந்த விடியல் பயணத்தில் உங்களுக்கு ஒரு சுதந்திரமும், முக்கியத்துவமும் கிடைக்கிறது இல்லையா? அதுதான் என் கனவு, என் லட்சியம் எல்லாம்.
அடுத்து, அரசுப் பள்ளியில் படித்து முடிக்கும் பெண்கள், கல்லூரியில் சேரும் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் கண்டுபிடித்தோம். இதை எவ்வாறு தடுக்கலாம் என்று சிந்தித்து உருவாக்கப்பட்ட திட்டம்தான், புதுமைப்பெண் திட்டம். சுமார் ஏழு லட்சம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
நான் தொடர்ந்து திரும்ப திரும்ப வலியுறுத்திச் சொல்லும் ஒரு விஷயம், “கல்விதான், யாராலும் திருட முடியாத சொத்து”. அதிலும், ஒரு பெண் படித்தால், அந்தக் குடும்பத்தின் நான்கைந்து தலைமுறையே முன்னேற்ற முடியும். அப்படிப்பட்ட பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண்களின் கல்லூரிக் கனவு தடைபடக் கூடாது என்றுதான், புதுமைப் பெண் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த திட்டத்தில் மாதாமாதம் 6 லட்சத்து 92 ஆயிரத்து 471 மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிக்கொண்டு இருக்கிறோம்.
எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. பெண்கள் முன்னேறினால்தான் ஒட்டுமொத்தச் சமூகமும் முன்னேறும் என்று நாம் இவ்வளவு செய்கிறோம். ஆனால், ஒன்றியத்தில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க. அரசு என்ன செய்துள்ளது? நாடு முழுவதும் இருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்துக்குத் துணையாக இருந்த மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தை இன்றைக்கு இழுத்து மூடியிருக்கிறார்கள்.
பாஜகவின் இந்த நடவடிக்கை பெண்களுக்கு முற்றிலும் விரோதமானது. அதற்கு ஒத்து ஊதுவது யார்? எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி என்ன சொல்கிறார்? “நூறு நாள் வேலைத் திட்டத்தை நிறுத்தவில்லை, 125 நாளாக உயர்த்தி இருக்கிறார்கள்” எனப் பச்சைப் பொய்யைப் பிரசாரமாகச் செய்து கொண்டிருக்கிறார்.
ஏற்கெனவே, ஆண்டுக்கு சராசரியாக 47 நாள்தான் வேலை கொடுத்திருக்கிறார்கள். இனி அதுவும் கொடுக்கப் போவதில்லை. இது போதாதென்று, புதிய திட்டத்தில் நிதிச்சுமையையும் மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டார்கள். இன்னும் எக்கச்சக்க கண்டிஷன் போட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் வைத்துப் பார்த்தால், இதுவரை கிடைத்த 40 சொச்சம் நாள் கூட இனி வேலை கிடைக்குமா என்றே தெரியாத நிலையில் இருக்கிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 86% பெண்கள்தான். பெண்களுக்கு வாழ்வளித்த இப்படிப்பட்ட திட்டத்தைத்தான் நிறுத்தியிருக்கிறார்கள். இதனால் கிராமப் பொருளாதாரமும், பணப்புழக்கமும் அடி வாங்கப் போகிறது.
எதையாவது படித்தால்தானே பழனிசாமிக்கு இவையெல்லாம் புரியும். கமலாலயத்தில் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை, அதிமுக லெட்டர்பேடில் வெளியிட்டு, அத்துடன் கதை முடிந்துவிட்டது என்று செல்கிறார். ஒரு படி மேலே சென்று, பாஜக சங்கிகளே கூச்சப்படும் அளவுக்கு 100 நாள் வேலைத் திட்ட இரத்துக்கு முட்டு கொடுத்துக்கொண்டு சுற்றுகிறார். இப்படிப்பட்ட துரோகங்களையும் தடைகளையும் தாண்டித்தான், திராவிட மாடல் ஆட்சியில் நாடே திரும்பிப் பார்க்கும் சாதனைகளை நாம் செய்துகொண்டு இருக்கிறோம்.
தங்கை கனிமொழிக்கு மட்டும் நான் அண்ணன் இல்லை; இங்கே வந்திருக்கும் கொள்கைச் சொந்தங்களான உங்கள் எல்லாருக்கும் நான் அண்ணன்தான். உங்கள் குடும்பத்தில் ஒருவன்தான் நான். அதனால்தான் உரிமையோடு சொல்கிறேன். தமிழ்நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தே தீர வேண்டும். அதற்கான உங்கள் பணியை இப்போதே தொடங்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.