திமுக பாணியை பின்பற்றி கட்சியை வலுப்படுத்தும் பணியில் பாஜக இளைஞரணி தீவிரமாகி இருக்கிறது. குறிப்பாக, இந்தத் தேர்தலில் பாஜக இளைஞரணியினர் முன்களப்பணியாளர்களாக செயல்பட வேண்டும் என்றும் திட்டமிட்டு செயலாற்ற ஆரம்பித்திருக்கிறது தமிழக பாஜக. அதன்படி அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சூர்யா பெருங்கோட்டம் வாரியாக சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு இளைஞரணியினரை தேர்தல் களத்துக்கு தயார்படுத்தி வருகிறார்.
தற்போது திருச்சி பெருங்கோட்டத்துக்கு உட்பட்ட 11 மாவட்டங் களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சூர்யாவுக்கு, 8 பெருங்கோட்ட கூட்டங்களை டிச.10-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டம் தரப்பட்டுள்ளது. அதன் பின்னர், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் உள்ளிட்ட ஏழு பெருங்கோட்டங்களிலும் இரண்டாம் நிலை கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
தேர்தலுக்கான இளைஞரணியின் செயல்பாடுகள் குறித்து பாஜக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “பாஜகவை வலுப்படுத்தும் விதமாக இளைஞரணியை வளர்த்தெடுக்கும் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு இளைஞரணி தலைவர், துணைத்தலைவர் உட்பட 33 பேருக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 20 ஒன்றியங்கள் உள்ளன.
இதற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் திருச்சி பெருங்கோட்டத்தில் 19,800 புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் தலா 20 பேரை கட்சியின் உறுப்பினர்களாக இணைக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், வரும் ஜனவரி 1-ம் தேதிக்குள் இளைஞரணியில் 4 லட்சம் பேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதே தற்போதைய பிரதான நோக்கம். மேலும், வாக்குச்சாவடி முகவர் பொறுப்பிலும் அதிகளவில் இளை ஞரணியினர் நியமிக்கப்படுவார்கள். வரும் தேர்தலில் கணிசமான தொகுதிகளில் போட்டியிட இளைஞரணியினரும் வாய்ப்புக் கேட்டுள்ளனர்.
திருச்சி உள்ளிட்ட 8 பெருங்கோட்ட கூட்டங்கள் முடிந்த பிறகு கோவை அல்லது மதுரையில் வரும் பிப்.1-ம் தேதி இளைஞரணி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்” என்றனர்.