பாஜக எம்எல்ஏ போஜராஜன்
சென்னை: “நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், 'களையைத் தான் பிடுங்க வேண்டும்... பயிரை அல்ல'” என பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தமிழக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேறியது. இந்தத் தீர்மானத்துக்கு பாஜக எம்எல்ஏ போஜராஜன் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியது: “ஏழை மாணவர்கள் பலர் நீட் தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர்.
நம் மாணவர்கள் எவ்விதத்திலும் பின்தங்கியவர்கள் கிடையாது. அவர்களை ஊக்கப்படுத்துவதே நம் கடமை. அரசு நீட் பயிற்சி மையங்களை அதிகளவில் அமைத்து, மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற வழிவகை செய்ய வேண்டும். அதை விடுத்து, தேர்வையே ரத்து செய்யும் தீர்மானத்தைக் கொண்டு வந்ததால் நான் வெளிநடப்பு செய்தேன்.
வினாத்தாள் கசிவு என்பது புதிதல்ல. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பலமுறை வினாத்தாள் கசிவுகள் ஏற்பட்டுள்ளன. அப்போது யாரும் காங்கிரஸ் அலுவலகங்களுக்குச் சென்று போராட்டம் நடத்தவில்லை. நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்தால், அந்தப் பிழைகளைத் தான் சரி செய்ய வேண்டும். 'பயிரில் களை இருந்தால், களையைத் தான் பிடுங்க வேண்டுமே தவிர, மொத்தப் பயிரையும் அழிக்கக் கூடாது'. தேர்வை மேம்படுத்துவதே சரியான தீர்வாகும்.
வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அதற்கான முறையான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் உள்ளன. வெளிநாட்டு நிதியைப் பெறுவோர் உரிய கணக்குகளைச் சமர்ப்பித்து, சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இது நாட்டின் நலன் சார்ந்தது. மத்திய அரசின் நடவடிக்கைகள் கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என அமைச்சர் வன்னியரசு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
சாதி மற்றும் மத ரீதியாகப் பிரித்துப் பேசுவது தவறானது. எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வெளிநாட்டு நிதியைப் பெற்று முறைப்படி கணக்குக் காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.