தமிழகம்

“விஜய் மனைவி விவாகரத்து கோரியதை அரசியல் ஆக்கக் கூடாது” - குஷ்பு கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: “விஜய் மனைவி விவாகரத்து கோரியது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அதை அரசியல் ஆக்கக் கூடாது” என்று பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு தெரிவித்தார்.

அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “தேர்தலுக்கு பாஜக தயாராக உள்ளது. மதுரையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடி தமிழகம் வருவது தேர்தலுக்காக மட்டுமல்ல. தமிழக மக்கள் மீது பிரதமருக்கு அன்பு, பாசம் உள்ளது.

ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் சேர இடம் கிடைக்கவில்லை. அதனால் அவருக்கு லாபம் கிடைக்கும் இடத்துக்கு சென்றுள்ளார். இன்னும் ஒரு வாரத்துக்கு பிறகு, பாஜக போட்டியிடும் தொகுதிகள் விவரம் தெரியவரும்.

விஜய் மனைவி விவாகரத்து கோரியது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அதை அரசியல் ஆக்கக் கூடாது. கணவன் - மனைவி இடையே உள்ள பிரச்சினைகளை நாம் பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை.

          

காங்கிரஸ் கட்சி தனித்து நிற்பதற்கு தகுதியும் தைரியமும் கிடையாது. அவர்கள் திமுகவிடமும் விஜய்யிடமும் பேரம் பேசுகிறார்கள். அவர்களுக்கு யாரிடம் இருந்து லாபம் அதிகமாக வருகிறதோ அங்கு செல்வார்கள். இனி மத்தியில் காங்கிரஸ் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது.

தற்போது தான், காங்கிரஸுக்கு ரோஷம் வந்து, தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்கிறது. ஆட்சியில் பங்கு தரமாட்டோம் என்று திமுக கூறியும் காங்கிரஸுக்கு ரோஷம் வரவில்லை. சூடு சொரணை எதுவுமே, காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு கிடையாது.

காங்கிரஸ் கட்சிக்கு, திராணி இருந்தால், இந்த தேர்தலில் தனியாக நிற்கட்டும். பாஜகவை தயவுசெய்து காங்கிரஸோடு ஒப்பிட வேண்டாம். பாஜகவுக்கு உள்ள தைரியம், தமிழகத்தில் எந்த கட்சிக்கும் வராது" இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT