மதுரை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராடும் எதிர்க்கட்சிகளை கண்டித்து மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லி, மும்பை, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை கண்டித்து பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் மலையேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் ராஜ சிம்மன், மாரி சக்கரவர்த்தி, மத்திய அரசு வழக்கறிஞர்கள் தாழைமுத்தரசு, பால்பாண்டி மற்றும் அய்யப்ப ராஜா, கோகுல் உள்பட பலர் பங்கேற்றனர்.
வழக்கறிஞர் மலையேந்திரன் கூறுகையில், “மத்திய அரசு, தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை மிரட்ட தொடங்கி உள்ளன. இதை அனுமதித்தால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும். எனவே, தொடர் போராட்டங்களில் ஈடுபடும் எதிர்க்கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.