நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
மதுரை: கூட்டணி ஆட்சியை பாஜக வலியுறுத்தவில்லை என்று தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மதுரையில் நடந்தால் அவர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வருகை தர வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் பொதுக்கூட்டம் வருகின்ற 23ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்துக்கான இடத்தை தேர்வு செய்வதற்கான பணியில் மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணி ஈடுபட்டுள்ளது. இதற்காக மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலை ஆய்வு செய்வதற்காக பாஜக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மதுரை வந்திருந்தனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான், பாஜக மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் அம்மா திடலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், ”பிரதமர் மோடி வருகை அன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக் கூட்டம் சென்னை, திருச்சி, மதுரை ஆகியவற்றில் எதாவது ஒரு இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்தில் நடத்துவது என்பது இன்னும் உறுதியாகவில்லை.
மதுரையில் நடைபெறுவதாக இருந்தால், பாண்டி கோவில் அம்மா திடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறுமானால், பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வருகை தர வாய்ப்பு இருக்கிறது. கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயல், அமித் ஷா ஆகியோர் முடிவு செய்வார்கள்.
விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என பாஜகவுக்கு எந்த அவசியமும் இல்லை. பழைய பராசக்தி படத்திற்கும் கூட சென்சார் போர்டு பல தடைகள் கொடுத்திருக்கிறது. கூட்டணி ஆட்சி வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தலாம். அவர்கள் செய்வதையெல்லாம் நாங்களும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. திமுக அகற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்களது நோக்கம். கூட்டணி ஆட்சி வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. 56 தொகுதிகள் மற்றும் 3 அமைச்சர்கள் வேண்டும் என்று பாஜக கேட்பதாக வெளியாகி உள்ள தகவல் வதந்தி” என்று தெரிவித்தார்.