தமிழகம்

தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட வாரியாக பாஜக விசாரணை குழு ஆய்வு

செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சந்தித்த தோல்வி குறித்து ஆராய, மாவட்ட வாரியாக 11 குழுக்களை அமைத்து கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறி வித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் தோல்வி குறித்து ஆய்வுசெய்ய பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் அண்மையில் கோவை வந்தார். அங்கு நடைபெற்ற மையக்குழு கூட்டத்தில், தோல்விக்கான காரணங்களை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மூத்த நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் தேசியத் தலைவர்களை சந்தித்து தேர்தல் முடிவுகள் குறித்து விளக்கம் அளித்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகம் முழுவதும் பாஜகவின் நிர்வாக ரீதியிலான 67 மாவட்டங்களில் ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மே 24 (இன்று) முதல் 29-ம் தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படும். அந்தந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட குழுத் தலைவர்கள், தோல்விக்கான காரணங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்து, விரிவான அறிக்கையை கட்சித் தலைமைக்குத் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்சித் தலைமை மொத்தம் 11 குழுக்களை அமைத்துள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 3 முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநிலச் செயலாளர் மீனாட்சி, செய்தித் தொடர்பாளர் கார்வேந்தன் ஆகியோர் சிவகங்கை, மதுரை (நகரம், கிழக்கு, மேற்கு), திண்டுக்கல் (கிழக்கு, மேற்கு) மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மத்திய அமைச்சர் எல்.முருகன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் தலைமையிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், ஆர்.என்.ஜெயபிரகாஷ், கே.பி.ராமலிங்கம், பேராசிரியர் ராம.சீனிவாசன், கார்த்தியாயினி உள்ளிட்டோரும் ஆய்வுக்குழுக்களில் நியமிக்கப்பட் டுள்ளனர். இந்தக் குழுக்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தமிழக பாஜகவில் அடுத்தகட்ட மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT