தமிழகம்

தடையை மீறி கல்லத்தி மரத்தை பார்வையிட்ட விவகாரம்: திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற ஹெச்.ராஜா கைது

செய்திப்பிரிவு

மதுரை: தடையை மீறி, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்லத்தி மரத்தை பார்வையிடச் சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உட்பட 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேற்று மாலை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவலிங்கம், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், பாஜக நிர்வாகிகள் சிவபிரபாகரன், ஹரிகரன் ஆகியோரும் உடன் சென்றனர்.

மலைக்குச் சென்ற ஹெச்.ராஜா, கல்லத்தி மரத்தில் தர்கா நிர்வாகத்தால் கட்டப்பட்ட கொடி அகற்றப்பட்டதா, இல்லையா? என்பதை பார்க்க வேண்டும் என்றார். ஆனால், போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதனால் போலீஸாருடன் ஹெச்.ராஜாவும், பாஜக நிர்வாகிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவர்கள் தடையை மீறி கல்லத்தி மரப்பகுதிக்குச் சென்றனர். அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக மலை அடிவாரத்துத்துக்கு அழைத்து வந்தனர். தடையை மீறி கல்லத்தி மரப்பகுதிக்குச் சென்றதாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 12 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது: தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றி இருந்தால் ஒரு நாளுடன் முடிந்திருக்கும். அதை செய்யாமல் மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும் பிரச்சினையை பெரிதாக்கிவிட்டனர். இருவரும் சட்டவிரோத அதிகாரிகள். சட்டத்தை மதிக்காத தீய சக்திகள்.

கல்லத்தி மரம் திருப்பரங்குன்றத்தின் தல விருட்சம். அதில் தர்கா நிர்வாகம் கொடியேற்றியுள்ளது. அதுவும் போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவில் கொடியேற்றியுள்ளனர். கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் கொடியை இதுவரை அகற்றவில்லை.

அந்த கொடியை உடனே அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், இந்துக்கள், முருக பக்தர்கள் திரண்டு வந்து கொடியை அகற்றும் நிலை ஏற்படும்.

‘பிணம் புதைக்கும் இடத்தில்தான் பிணத்தை புதைப்பார்கள்’ என்று கூறி தீபம் விவகாரத்தை விமர்சிக்கிறார் சட்டமே தெரியாமல் சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி. தை மாத கார்த்திகை நட்சத்திரத்துக்குள் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். இல்லாவிட்டால், இது தேர்தல் பிரச்சினையாக மாறும். திமுக கூட்டணியை வீட்டுக்கு அனுப்புவோம். இவ்வாறு அவர் கூறினார். கைது செய்யப்பட்ட ஹெச்.ராஜா உள்ளிட்ட அனைவரும் இரவில் விடுவிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT