நாராயணன் திருப்பதி
சென்னை: ‘தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்களின் கணக்குகளை முடக்க கோருவது பேச்சு சுதந்திரத்தின் மீதான வெளிப்படையான தாக்குதல்’ என பாஜக மாநிலத் தலைமைச் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு இணைய குற்றப்பிரிவு எக்ஸ் தளத்துக்கு அனுப்பியுள்ள ஓர் அறிவிக்கையில் @MaridhasAnswers உட்பட 18 கணக்குகளின் விமர்சனப் பதிவுகளை நீக்கவும், முடக்கவும் கோரியுள்ளது, பேச்சு சுதந்திரத்தின் மீதும் அரசியல் எதிர்ப்பின் மீதும் நடத்தப்பட்ட வெளிப்படையான தாக்குதல் ஆகும்.
ஓர் அரசியல் கட்சியையோ அல்லது அதன் தலைவரையோ கடுமையாக விமர்சித்தால் “பொது அமைதியை தூண்டுதல்” என்று சொல்லி போலீஸ் தலையீடும், எச்சரிக்கையும் தேவையற்ற நடவடிக்கையே.
நிர்வாகம், நிதி, கொள்கைகள் குறித்த நியாயமான கேள்விகளை “பொது அமைதிக்கு அச்சுறுத்தல்” என்று முத்திரை குத்துவது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, ஜனநாயகத்தை நெறித்துவிடும்.
எதிர்ப்பு என்பது ஜனநாயகத்தின் உயிர் நாடி. தவெக அல்லது எந்தவொரு ஆளும் கட்சியின் விமர்சகர்களை அடக்கவும் சைபர் சட்டங்களைப் பயன்படுத்துவது அரசியலமைப்பையே பலவீனப்படுத்தும் செயலாகும். இது சட்ட அமலாக்கம் அல்ல, மாறாக இது அதிகார துஷ்பிரயோகமாகும். இந்த அதிகார துஷ்பிரயோகத்தை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.
பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும், ஆளும் தரப்பின் விருப்பத்திற்கேற்ப ஏற்ப காவல் துறை செயல்படக் கூடாது.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே சாமானிய மக்கள் மீது இந்த வருந்தத்தக்க துன்புறுத்தல் தொடங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. முதல்வரான பின்னர் தன் முதல் உரையில், அரசியல் பயணத்தில் பல தடைகளை எதிர்கொண்டதாக பேசிய முதல்வர் ஜோசப் விஜய், இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, அத்துமீறலை புரிந்துகொண்டு, உடனடியாக சைபர் குற்றப் பிரிவின் மேற்படி நடவடிக்கையை திரும்பப் பெற உத்தரவிடுவார் என்று நம்புகிறேன்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற திராவிட மாடல் அராஜகங்களை தொடர வேண்டாம். அதே நேரம், முதலமைச்சரை தரக்குறைவாகவோ, அநாகரிகமாகவோ யார் விமர்சித்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கொள்கை ரீதியான விமர்சனமும், அரசியல் எதிர்ப்பும் குற்றங்கள் அல்ல என்பதை முதல்வர் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.