தமிழகம்

நாகர்கோவிலில் பொன்னார்... நாங்குநேரியில் தமிழிசை - தயாரானது பாஜக வேட்பாளர் பட்டியல்

கரு.முத்து

கூட்டணி இன்னும் இறுதியாகாவிட்டாலும் அடுத்தகட்ட பணிகளில் மற்ற கட்சிகளை விட பாஜக வேகமாக முன்னேறிக் கொண்டி ருக்கிறது. தங்களுக்கான தொகுதிகள், போட்டியிடும் வேட்பாளர்கள் என அனைத்தையும் அந்தக் கட்சி பக்காவாக சார்ட் போட்டுவைத்து விட்டதாகச் சொல்கிறார்கள்.

பாஜக-வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட பாஜக உயர்மட்டக் குழுவினர், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு சட்டமன்றத் தொகுதி வாரியாக எங்கெல்லாம் அதிகமான வாக்குகள் விழுந்தி ருக்கின்றன என்பதைக் கணக்கெடுத்து அதற்கேற்ப தங்களுக்கான தொகுதிகள் பட்டியலை தேர்வு செய்திருக்கின்றனர். இதன்படி 50 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக நிர்வாகிகள் சிலர், “தென் மாவட்டங்களில் மொத்தம் உள்ள 58 தொகுதிகளில் 15 தொகுதிகள் பாஜக தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த 58 தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது.

இங்கு பெருவாரியான தொகுதிகளை அதிமுக கூட்டணி இழக்கக் காரணம், முக்குலத்தோர் அதிருப்தி, ஓபிஎஸ், தினகரன் விவகாரம் உள்ளிட்டவை தான். அதனால் இப்போதும் தெற்கில் போட்டியிட அதிமுக தயக்கம் காட்டுகிறது. அதனால், தெற்கில் தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும்படி நாங்களே கேட்கப் போகிறோம்.

அதன்படி, கன்னியாகுமரி, சென்னை மாவட்டங்களில் தலா மூன்று தொகுதிகளும், திருநெல்வேலி, மதுரை, சிவகாசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா இரண்டு தொகுதிகளும், மற்ற மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியும் பாஜக-வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் வீதம் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டுவிட்டார்கள்.

அதன்படி, நாகர்கோவிலில் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோட்டில் விஜயதரணி, நாங்குநேரியில் தமிழிசை, திருச்செந்தூரில் சரத்குமார், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், சென்னை தி.நகரில் வினோஜ் பி.செல்வம், கோவை தெற்கில் வானதி சீனிவாசன், பேராவூரணியில் கருப்பு முருகானந்தம், ராசிபுரத்தில் வி.பி.துரைசாமி என முதல்கட்ட தொகுதிகளும், வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது” என்றனர்.

இம்முறை, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதிகளையும் குறிப்பிட்டு பாஜக தங்களுக்காக கேட்கிறதாம். அந்தத் தொகுதிகளில் பெருவாரியாக வசிக்கும் இந்துக்கள் மத்தியில் இந்துத்துவாவை உணர்வுபூர்வமாக தட்டி எழுப்பி வெற்றிபெறலாம் என்பதே இதன் கணக்காம்.

தங்களால் தேர்வுசெய்யப்பட்டுள்ள 50 தொகுதிகளிலும் போட்டியிட முடியாமல் போனாலும் அதிமுக தரும் தொகுதிகளை இந்த 50-க்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறதாம் பாஜக தலைமை. அதேசமயம், இந்த 50 தொகுதிகளில், அதிமுக-வின் சிட்டிங் தொகுதிகளும் இருப்பதால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் தொகுதிகளைக் கைப்பற்ற கடைசி நேர இழுபறிகளும் நடக்கலாம்.

SCROLL FOR NEXT