தமிழக பாஜக-வின் பிரசார தளகர்த்தராகவும், ஊடகங்களின் பலத்தையும் நாடித்துடிப்பையும் நெருக்கமாக இருந்து அறிந்தவருமான பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் ‘ஜனநாயக திருவிழா’வுக்காக நம்மிடம் பேசியதிலிருந்து…
தேசிய கட்சியின் செய்தி தொடர்பாளர் என்ற முறையில் தமிழக பத்திரிகையாளர்கள் மீது உங்களுக்கு விமர்சனம் ஏதேனும் உள்ளதா?
நிச்சயம் இருக்கிறது. தமிழக பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் இடதுசாரி சார்பு நிலையை முன்னெடுப்பதில் கவனமாகவும், குறியாகவும் இருக்கின்றனர். எந்தவித அடிப்படை புரிதலும் இல்லாமல், சிறு வயதில் இருந்தே அவர்கள் வளர்ந்த இடத்தில், அவர்களிடம் புகுத்தப்பட்ட கருத்துகளை முழுமையாக உள்வாங்கி கொண்டு அப்படியே செயல்படுவது வருத்தத்துக்குரிய விஷயம்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். பற்றி புரிதல் இல்லாமல், மோடி அரசின் மக்கள் நல திட்டங்களை பற்றியும், புரிந்தும் புரியாமலும் பேசி எதிர்ப்பது உண்மையில் ஜனநாயக படுகொலைக்கு சமம் என்பதை பத்திரிக்கையாளர்கள் உணர வேண்டும்.
பத்திரிகையாளர் சந்திப்புகளின் போது அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் சில நேரங்களில் மோதல் ஏற்படுவது குறித்து?
ஜனநாயகத்தை காப்பவர்களாக பத்திரிகையாளர்கள் செயல்படுகிறார்கள். காவல்துறையில் சில கருப்பு ஆடுகள் இருப்பது போல, பத்திரிகை துறையிலும் கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள். அவர்கள் பத்திரிகை துறையின் கண்ணியத்தையும், மேண்மையையும் குலைக்கும் வகையில் செயல்படுகின்றனர். அதேபோல், பத்திரிகையாளர்களை வரம்புமீறி பேசுவதும், அவர்களை விமர்சிப்பதும், அவர்களை பற்றி ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறுவதையும் தலைவர்கள் கைவிட வேண்டும்.
தமிழகத்தில் இப்போது தலைவர்களுக்கான வெற்றிடம் இருப்பதாக கருதுகிறீர்களா?
ஆம். எல்லோரும் தங்களை தலைவர்களாக நினைத்துக் கொண்டு போலி அரசியல் செய்கின்றனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் அந்த வெற்றிடத்தை நிரப்பும், தலைவர்களை அடையாளம் காட்டும். நடிகர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பேச்சாளர்கள், என மக்களின் ஈர்ப்பை பெற்றவர்கள் எல்லோரும் தலைவர்கள் ஆகி விட முடியாது. வாரிசு அரசியல் அதிகார அரசியலுக்காக தலைவர்களாக திணிக்கப்பட்டவர்கள், நிர்வாகிகள், கட்சி ஆரம்பித்து தலைவர்களாக அறிவித்துக் கொண்டவர்கள் எல்லாரும் தலைவர்கள் அல்ல.
சுயநல விளம்பர அரசியல் செய்யாமல் தங்களுடைய இயக்கத்தின் கொள்கைகளை முன்னிறுத்தி, தங்களின் மக்கள் நல அரசியல் பணியால், மக்களின் இதயத்தை வென்று மக்களால் நிரூபிக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்டவர்களே தலைவர்கள். அந்த வரிசையில் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் தான் இருக்கிறார்கள்.
என்.டி.ஏ. கூட்டணியில் தற்போதுவரை அதிமுக - பாஜக மட்டுமே இருக்கும் நிலையில், கூட்டணியில் மேலும் கட்சிகளை இணைக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
தேசிய ஜனநாயக கூட்டணியை அமித் ஷா ஏற்படுத்தியவுடன், திமுக தன்னுடைய எல்லாவிதமான மக்கள் விரோத அரசியல் சாதுரியங்களை கையில் எடுத்து, அதிமுக கூட்டணியை பிரிக்கவும், அதிமுகவுக்கு வரக்கூடிய கூட்டணி கட்சிகளை விலைக்கு வாங்கவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறது.
எங்கள் கூட்டணி, தேர்தல் நேரத்தில் வெற்றிக் கூட்டணியாக மாறும். அனைத்தையுமே வெளிப்படையாக சொல்ல முடியாது. ஏனென்றால், என்.டி.ஏ. கூட்டணியை பிரிப்பதற்கென்றே துரோகிகளும், திமுகவும் சதி செய்து வருகிறார்கள்.
அதிமுகவை ஒருங்கிணைக்கும் பாஜகவின் முயற்சி பலனில்லாமல் போய்விட்டதா?
எப்போதும், ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்கும் போது, நாம் எதிர்பார்க்கக்கூடிய மகத்தான வெற்றி கிடைக்கும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தான் எல்லோரும் நினைக்கிறோம்.
செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்ததில் பாஜகவின் சதி இருக்குமோ என்ற சந்தேகத்தை திருமாவளவன் கிளப்பியிருக்கிறாரே?
தமிழகத்தில் சில அரசியல் கோமாளிகள் தங்களது இருப்பை காட்டிக்கொள்ள அதிமுக - பாஜக கூட்டணியை விதவிதமாக விமர்சித்து வருகின்றனர். அதில், திருமாவளவனும், அரசியல் நடிகர், இயக்குநருமான சீமானும் அடங்குவார்கள்.
தேசிய சிந்தனை கொண்ட வெற்றிகரமான மக்கள் நல அரசியல்வாதியாக பணியாற்ற வேண்டும் என உதயநிதிக்கு நீங்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளீர்களே?
உதயநிதிக்கு வாக்களித்த தமிழக மக்களின் ஆசையை நான் சொல்லியிருக்கிறேன். என்னுடைய தலைமுறை தலைவராக உதயநிதி இருக்கிறார். ஒரு இளைஞர் தமிழகத்தில் முக்கிய பொறுப்பில், தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார். அவர் ஒரு மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும் என ஆசைப்படுவதும், வாழ்த்து கூறுவதும் அரசியல் நாகரிகம்.
ஒரு மாதத்துக்குள் அதிமுகவை ஒருங்கிணைக்காவிட்டால், புதிய கட்சி தொடங்கப்படும் என பன்னீர்செல்வம் கெடு விதித்திருப்பதை பற்றி?
பிரதமருக்கு பிடித்த அன்பு நண்பர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் விரோத திமுகவை வீழ்த்த நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேநேரத்தில் அண்ணன், செங்கோட்டையனின் முடிவு துரதிருஷ்டவசமானது.
செங்கோட்டையன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படத்தை பயன்படுத்தி வருகிறாரே... அதிமுக ஓட்டுகளை வசப்படுத்தவா?
எம்.ஜி.ஆர்., உருவாக்கி ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவுக்குத்தான் அதன் தொண்டர்கள் வாக்களிப்பாளர்கள். அரசியலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. செங்கோட்டையன் தவெகவில் இணைந்தாலும், அவர் விஜய்யின் புகைப்படத்தை வைத்து மக்களிடம் வாக்கு கேட்க விரும்பவில்லை என்பதை இது காட்டுகிறது. விஜய்யின் அரசியல் பிரவேசம் வெற்றி பெறாது.
என்.டி.ஏ. வெற்றி பெற்றால், தனிக்கட்சி ஆட்சியா? கூட்டணி ஆட்சியா?
பழனிசாமி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.