அண்ணாமலை
தமிழர்களை அவமானப்படுத்துவதா? நான் மும்பை வருவேன். தைரியம் இருந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள் என ராஜ் தாக்கரேக்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களுக்கு இழைத்த துரோகங்களும், அவர்களின் அடாவடித்தனங்களும் மிக அற்புதமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஈழப் படுகொலைக்கு பிறகு காங்கிரஸ் எப்படி மக்களால் துரத்தப்பட்டதோ, அதேபோல் அவர்களுடன் கூட்டணி வைப்பவர்களும் வீழ்வார்கள். ‘பராசக்தி’ திரைப்படம் திமுகவை வீழ்த்தும் முரசொலியாக அமையும். ஏனெனில் தீ எப்போதும் சொந்த வீட்டிலிருந்துதான் தொடங்கும்.
ஆதித்ய தாக்கரே, ராஜ் தாக்கரே எல்லாம் யார்? மும்பைக்கு வந்தால் என் காலை வெட்டுவேன் என மிரட்டுகிறார்கள். நான் ஒரு விவசாயியின் மகன். இந்த உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயந்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். மூன்று தாக்கரேக்கள் கூட்டம் போட்டு என்னை அவமானப்படுத்துகிறார்கள். வேட்டி கட்டியவர்களையும் லுங்கி கட்டியவர்களையும் கிண்டல் செய்கிறார்கள். தமிழர்களை அவமானப்படுத்துவதா? அவர்களுடன் திமுக கூட்டணி வைத்திருப்பதுதான் ஆச்சரியம். நான் மும்பை வருவேன். தைரியமிருந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள்.
சீமானை யாரும் சாதாரணமாக எடை போட வேண்டாம். தனித்து நின்று கொள்கைக்காகப் போராடும் அவர் எட்டரை சதவீத வாக்குகளை வைத்துள்ளார். அதேபோல், விஜய் ஒரு வலிமையான சக்தியாகக் களமிறங்கியுள்ளார். அவரது வருகை போட்டியை இன்னும் சூடாக்கியுள்ளது. பழமையான பிராந்திய கட்சியான திமுகவின் பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தக் கட்சிகளை எல்லாம் சேர்க்க வேண்டும் என்பதில் என்னுடைய கருந்தில் எந்த மாற்றமும் இல்லை. நான் ஆரம்பத்தில் என்ன கூறினேனோ அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இது சாதாரணமான தேர்தல் அல்ல. வித்தியாசமான தேர்தல். தமிழகத்தில் நீண்ட காலத்துக்குப் பிறகு நான்கு முனை போட்டி நடைபெறுகிறது. இந்த நான்கு முனை போட்டி என்பது வலிமையான பலமான போட்டியாக இருக்கும். எனவே ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். ஒவ்வொரு கட்சியும் முக்கியம். இந்திய அணியில் கோலி மட்டுமே விளையாடி ஜெயிக்க முடியாது. சிறந்த வீரர்கள் சேரும்போதுதான் அணி வலிமையாகும்.
‘டீம்’-ல் புதுப் பிளேயர் ஆக விஜய்யை இறக்குவது குறித்து நான் எதுவும் கூற முடியாது. திமுகவை வீழ்த்த ஒத்த கருத்து உடையவர்கள் இணைய வேண்டும். ஆனால், மக்கள் கொள்கைகளையும் பார்க்கிறார்கள். நேர் எதிர் கொள்கை கொண்டவர்கள் சேர்வது என்பது சைவ பிரியாணியையும் அசைவ பிரியாணியையும் கலந்து சாப்பிடுங்கள் என்று சொல்வது போன்றது.
இந்தத் தேர்தலில் நான் பயிற்சியாளரும் அல்ல, கேப்டனும் அல்ல. உங்களைப் போல் ஒரு பார்வையாளர்தான். மக்கள் எஜமானர்கள், அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். நடிகர் விஜய்யை சிபிஐ விசாரணைக்கு சென்றிருக்கிறார். சம்மன் வழங்கப்படுவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது. அவர் சட்டப்படி எதிர்கொள்கிறார். இதில் நான் கருத்து சொல்ல ஏதுமில்லை. நானும் அவரின் ரசிகனாக ‘ஜனநாயகன்’ படத்துக்காகக் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.