சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜகவும் திமுக தலைமையிலான கூட்டணயில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டன. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸில் அக்கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவியது. பல்வேறு காரணங்களால் பட்டியல் வெளியாவதில் பெரும் இழுபறி நீடித்தது.
கடந்த 31-ம் தேதி சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மையக்குழுவுடன் நடத்திய தீவிர ஆலோசனைக்குப் பிறகு, பட்டியல் இறுதி செய்யப்பட்டு அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்தப் பட்டியலில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த முறை திருநெல்வேலியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த முறை சாத்தூர் தொகுதிக்கும் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவிநாசி தொகுதியிலும், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை மயிலாப்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மொடக்குறிச்சியில் தற்போதைய எம்எல்ஏ சரஸ்வதிக்கு பதிலாக அவரது மருமகள் கிருத்திகா சிவக்குமார் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும், தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கே.சி.திருமாறனுக்கு, பாஜகவில் இருந்து, ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி, பாஜக வழங்கும் என கூறப்பட்ட நிலையில், அந்த கட்சிக்கு எந்த தொகுதியும் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறும்போது, ‘கேட்ட தொகுதியை வழங்காமல், கடினமான தொகுதியை பாஜக எங்களுக்கு வழங்கியதால், அந்த தொகுதியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டேன். அந்த தொகுதியில் நல்ல வேட்பாளரை பாஜக களமிறக்கியுள்ளது. நிச்சயம் பாஜக வெற்றி பெறும். புதிய நீதி கட்சி ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடும்’ என்றார்.
பாஜக வேட்பாளர்கள் விவரம்: சாத்தூர் - நயினார் நாகேந்திரன், மயிலாப்பூர் - தமிழிசை, கோவை வடக்கு - வானதி சீனிவாசன், அவிநாசி - எல்.முருகன், ஆவடி - எம்.ராஜசிம்ம மகேந்திரா (எ) அஷ்வின் குமார், தளி - டாக்டர் நாகேஷ்குமார், திருவண்ணாமலை - சி.ஏழுமலை, ராசிபுரம் (தனி) - டாக்டர் எஸ்.டி.பிரேம்குமார், மொடக்குறிச்சி - கிருத்திகா சிவக்குமார், உதகமண்டலம் - போஜராஜன். திருப்பூர் (தெற்கு) - எஸ்.தங்கராஜ், திருவாரூர் - கோவி சந்துரு, தஞ்சாவூர் - எம்.முருகானந்தம், கந்தர்வக்கோட்டை (தனி) - சி.உதயகுமார், புதுக்கோட்டை - என்.ராமசந்திரன், அறந்தாங்கி - கவிதா ஸ்ரீகாந்த், திருப்பத்தூர் - கே.சி.திருமாறன், மானாமதுரை (தனி) - பொன். வி.பாலகணபதி.
மதுரை தெற்கு - ராம சீனிவாசன், ராமநாதபுரம்- ஜிபிஎஸ் கே.நாகேந்திரன், திருச்செந்தூர்- கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் (தனி) - ஆனந்தன் அய்யாசாமி, ராதாபுரம் - எஸ்.பி.பாலகிருஷ்ணன், நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி, குளச்சல்- டி.சிவக்குமார், பத்மநாபுரம்- பி.ரமேஷ், விளவங்கோடு - எஸ். விஜயதரணி.
காங்கிரஸில் 13 புதுமுகங்கள்: இதேபோல் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலும் நேற்று வெளியானது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு கடந்த தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் 18-ல் வென்றது. அதனால் இந்த முறை 25 தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டிருந்தது.
நீண்ட போராட்டத்துக்கு பிறகு அக்கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதியே அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் தேர்வு கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் வேட்பாளர் பட்டியல், நீண்ட இழுபறிக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. அதிலும் மதுரை மேலூர் தொகுதி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 27 வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டனர்.
வேட்பாளர் விவரம்: பொன்னேரி (தனி)- துரை சந்திரசேகர், வேளச்சேரி- அசன் மவுலானா, ஸ்ரீபெரும்புதூர் (தனி)- செல்வப்பெருந்தகை, சோளிங்கர்- ஏ.எம்.முனிரத்தினம், ஊத்தங்கரை- ஆர்.குப்புசாமி, கிருஷ்ணகிரி- ஏ.செல்லக்குமார், பென்னாகரம்- ஜிகேஎம்.தமிழ்குமரன், ஆத்தூர்- எஸ்.கே.அர்த்தநாரி, ஈரோடு கிழக்கு- ஜி.பழனியப்பன், உதகை- பி.ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம்- கே.பி.சூரியபிரகாஷ், சிங்காநல்லூர்- வி.ஸ்ரீநிதி நாயுடு, துறையூர்- விச்சு லெனின் பிரசாத், கடலூர்- ஏ.எஸ்.சந்திரசேகரன்.
மயிலாடுதுறை- ஜமால் யூனுஸ் முகமது, அறந்தாங்கி- டி.ராமச்சந்திரன், காரைக்குடி- எஸ்.மாங்குடி, உசிலம்பட்டி- டி.சரவணக்குமார், சிவகாசி- ஜி.அசோகன், திருவாடனை- ராம கருமாணிக்கம், ஸ்ரீவைகுண்டம்- எஸ்.ஊர்வசி அமிர்தராஜ், சங்கரன்கோவில்- சங்கை கணேசன், அம்பாசமுத்திரம்- வி.பி.துரை, நாங்குநேரி- ரூபி மனோகரன், குளச்சல்- தாரகை கத்பர்ட், விளங்கோடு- டி.டி.பிரவீன், கிள்ளியூர்- செ.ராஜேஷ்குமார்.
இந்த வேட்பாளர் பட்டியலில் 12 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தென்காசி பழனி நாடார், குளச்சல் தொகுதியில் 3 முறை வென்ற ஜே.ஜி.பிரின்ஸ், உதகை ஆர்.கணேஷ், விருத்தாச்சலம் ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை எஸ்.ராஜகுமாரன் ஆகிய 5 எம்எல்ஏக்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2 மகளிருக்கும் 13 புதுமுகங்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தொடர்ந்து கட்சி தலைமையை வலியுறுத்தி வந்த சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்திலேயே, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் ஜிகேஎம்.தமிழ்குமரனுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அந்தத் தொகுதியில் தனது உறவினருக்கு வாய்ப்பளிக்க மாணிக்கம் தாகூர் எம்.பி. முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய கட்சிகளான காங்கிரஸூம், பாஜகவும் நேரடியாக உதகை, அறந்தாங்கி, குளச்சல், விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் மோதுகின்றன.