திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் பிரச்சினை தொடர்பாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: திருப்பரங்குன்றத்தில் நேற்று முன்தினம் இரவு போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, முத்துமுருகன் உட்பட 12-க்கும் மேற்பட்டோரை திருப்பரங்குன்றம் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், பாஜக வழக்கறிஞர்கள் திருப்பரங்குன்றம்காவல் நிலையத்துக்கு நேற்று சென்றனர். ஆனால், கைது செய்யப்பட்டவர்களை பார்க்க அனுமதிக்காமல், காவல்நிலைய கதவுகளை அடைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாஜக வழக்கறிஞர்கள் ரமேஷ் பாண்டியன், அய்யப்பராஜா உள்ளிட்டோர் கூறும்போது, "நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் நேற்று முன்தினம் மாலை கூடியபோது, காவல் துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, நள்ளிரவில் 12-க்கும்மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. இது மனித உரிமை மீறல். பாஜக, இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொதுப் பிரச்சினைக்காக போராடியவர்கள். அவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது" என்றனர்.