கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சலே காரணம் என உறுதி செய்யப்பட்ட நிலையில், 16 பண்ணைகளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பண்ணைகளில் கோழிகள் முழுமையாக உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது. பரவி வரும் பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த, கடலூர் மாவட்டத்தில் கால்நடைத் துறை சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த அக்.28-ம் தேதி முதல் பல்வேறு கறிக்கோழி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதற்கான காரணம் குறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இறந்த கோழிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை, நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆய்வையடுத்து, கோழிகள் உயிரிழப்புக்கு பறவைக் காய்ச்சல் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் கறிக்கோழி பண்ணைகளில் 12-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த கட்டியங்குப்பம் பகுதியில் உள்ள கோழி பண்ணைகள் மற்றும் கடலூர் மத்திய சிறை வளாகத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய் பாதிக்கப்பட்ட கோழிகளை அழித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், “கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 126 இடங்களில் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் 16 இடங்களில் மட்டுமே பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றில் 10 பண்ணைகளில் வளர்க்கப்பட்ட கோழிகள் முழுமையாக உயிரிழந்துள்ளன. மீதமுள்ள 6 பண்ணைகளில் உள்ள கோழிகளை பாதுகாப்பு நடவடிக்கையாக அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்து வந்த நிலையில், தற்போது பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, பரவி வரும் பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த, கடலூர் மாவட்டத்தில் கால்நடைத் துறை சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிற இடங்களில் உள்ள கோழிப்பண்ணைகளும் தொடர் கண்காணிப்பில் உள்ளன.
கிராமங்களிலும் தனி நபர்களிடம் கோழிகள் இறப்பு ஏற்பட்டால் உடனடியாக கால்நடைத்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழிப் பண்ணையாளர்களும் வளாகங்களைச் சுத்தம் செய்து, கிருமி நீக்கம் செய்து மற்றும் புகைமூட்டம் செய்து வருகின்றனர்.