சென்னை: தமிழகத்தில் நன்செய் நிலங்களை மேம்படுத்த நகர ஊரமைப்பு இயக்குநருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில், நேற்று வீட்டுவசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற வளர்ச்சிக் குழுமங்கள், நகரத் திட்டமிடல், உள்கட்டமைப்பு மேம்பாடு, நில மேம்பாடு, வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துதல், நகர்ப்புற வளர்ச்சியை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
தற்போது நகர்ப்புற வளர்ச்சியின் அளவும், அதன் சிக்கல் தன்மைகளும் அதிகரித்துள்ளன. இதைக் கருத்தில்கொண்டு, இப்பணிகளுக்கு தொடர்ச்சியான மற்றும் அர்ப்பணிப்புள்ள கவனம் செலுத்துவதும், உரிய நேரத்தில் முடிவுகளை எடுப்பதும் அவசியமாகிறது.
தலைவர், உறுப்பினர்: எனவே, நகர்ப்புற மேம்பாட்டுக் குழுமங்களின் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், முழுநேரத் தலைவரையும், உறுப்பினர் செயலரையும் நியமிப்பது அவசியமாகிறது. இதன்மூலம் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் செயல் பணிகளில் அதிக கவனம், தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை உறுதிசெய்ய இயலும். அதேநேரம் மாவட்ட நிர்வாகத்துடன் பயனுள்ள ஒருங்கிணைப்பை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர், ஆணையத்தின் உறுப்பினராக தொடர்ந்து செயல்படுவார்.
மேலும், திட்டப் பகுதி அல்லாத பிற பகுதிகளில் உள்ள நில மேம்பாட்டுக்கான அனுமதியை முன்னதாக, உள்ளாட்சி அதிகார அமைப்பானது, இயக்குநரின் முன்அனுமதியைப் பெறுவதை கட்டாயப்படுத்துகிறது. மேலும், நன்செய் நிலங்களை பொறுத்தவரை தொடர்புடைய மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலையும் பெற வேண்டியது அவசியமாகும்.
காலதாமதம்: இந்த நடைமுறையின் காரணமாக திட்ட அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து அவற்றை முடிவெடுப்பதில் தேவையற்ற காலதாமதங்கள் ஏற்பட்டன. நில மேம்பாட்டுக்கான அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும், நடைமுறை சார்ந்த காலதாமதங்களை குறைக்கவும் அத்தகைய அனுமதியைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கவும், திட்டப்பகுதி இல்லாத பகுதிகளில் நன்செய் நிலங்களை மேம்படுத்த மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற தேவையை நீக்கி, உள்ளாட்சி அமைப்புக்கு முன் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை இயக்குநருக்கு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக நகர ஊரமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.