பாஜக-வினர் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடு முழுவதும் கட்சி நூலகங்களை கட்டமைத்து வருகிறார். அப்படி இதுவரை 142 நகரங்களில் நூலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் பேராசிரியர் ஆசீர்வாதம் ஆச்சாரி.
டெல்லியில் உள்ள பாஜக-வின் டிஜிட்டல் லைப்ரரியின் அட்மினாகவும் இருக்கும் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரான ஆச்சாரி, தமிழக பாஜக செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறார். அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசியதிலிருந்து...
முன்பு பாண்டா வந்தார்... இப்போது பியூஷ் கோயல் வருகிறார். தமிழக அரசியலை கையாள்வது பாஜக-வுக்கு அத்தனை சவாலாக இருக்கிறதா?
சவால் என்று சொல்லமுடியாது. 2021 தேர்தலில் தமிழக பொறுப்பாளராக இருந்தவர் என்பதால் பியூஷ் கோயலுக்கு தமிழக அரசியல் அத்துபடி. தனது முழு கவனத்தையும் தமிழகத்தின் மீது வைத்திருக்கும் அமித் ஷா, பாஜக வெற்றிக்கு ஏதுவாக பியூஷ் கோயலை அனுப்பி வைக்கிறார்.
ஜால்ரா அடித்துத்தான் பதவியில் இருக்க வேண்டும் என்றால் அந்தப் பதவியே எனக்குத் தேவையில்லை என்று சொல்லி இருக்கிறாரே அண்ணாமலை?
மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார். அண்ணாமலை தலைவரான பிறகு நடத்திய ‘என் மண்’ யாத்திரை மூலம் இளைஞர்களை பெருவாரியாக கட்சிக்குள் கொண்டு வந்தார். அப்படி வந்தவர்களுக்குப் பதவிகளைக் கொடுத்து ஆக்கபூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்தினார். 2024-ல் பாஜக-வின் வாக்கு வங்கி 18 சதவீதமாக உயர்ந்ததற்கு அடித்தளம் அமைத்தவர் அண்ணாமலை. இங்கே தனிப்பட்ட நபர்களை வைத்து கட்சி இல்லை. அதனால் யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலையை தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றியது தவறான முடிவு என நினைக்கிறீர்களா?
அப்படியெல்லாம் கிடையாது. இன்னும் அண்ணாமலை கட்சியில் ஆக்டிவாகத்தான் இருக்கிறார். அவரது பதவி காலம் முடிந்ததால் அவர் மாற்றப்பட்டார்.
பழனிசாமிக்கு பிடிக்காத போது தினகரனுடனும் ஓபிஎஸ்ஸுடனும் அண்ணாமலை ஒட்டி உறவாடுவது கூட்டணிக்குள் சங்கடத்தை உண்டாக்காதா?
ஏற்கெனவே எங்களோடு கூட்டணியில் இருந்த அவர்களை பொது நிகழ்ச்சிகளில் அண்ணாமலை சந்தித்துப் பேசுவதை பாஸிட்டீவ் அவுட் லுக் உடன்தான் பார்க்க வேண்டுமே தவிர, அவர்களைப் பார்க்கவே கூடாது... பேசவே கூடாது என்று சொல்லமுடியாது.
பாஜக-வுக்கு 25 தொகுதிகள் தான் தரமுடியும் என்கிறாராமே பழனிசாமி?
அந்தக் கட்டத்துக்கே இன்னும் வரவில்லை. அப்படி இருக்கையில் இந்தப் புரளிகள் எல்லாம் வெறும் ஹேஷ்யம் தான்.
கூட்டணி ஆட்சிக்கு முன்பு சம்மதித்துவிட்டு இப்போது, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்கிறதே அதிமுக..?
பழனிசாமி முதலமைச்சர் என்பது தான் எங்கள் கூட்டணியின் முடிவு. தேர்தலுக்குப் பிறகு, யார் யாரெல்லாம் அமைச்சரவையில் இடம்பெறுவது, அது எப்படிப்பட்ட அமைச்சரவையாக இருக்கும் என்பதை எல்லாம் அமித் ஷாவும் பழனிசாமியும் முடிவெடுப்பார்கள்.
தினகரனையும் ஓபிஎஸ்ஸையும் பாஜக இன்னும் எதற்காக கட்டி இழுக்கிறது?
2008-ல் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சி.பி.ஜோஷி ஒரு ஓட்டில் தோற்றுப் போனார். எனவே, தேர்தலில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றாக இருந்தால் நல்லது என்பதால் அவர்கள் இருவரையும் சேர்க்க நினைக்கிறோம். இருப்பினும் இதில் இறுதி முடிவு எடுப்பவர்கள் அமித் ஷாவும் பழனிசாமியும் தான்.
பிஹாரில் இறக்கியதைப் போல தமிழக தேர்தலுக்கும் ‘சிறப்புத்’ திட்டங்கள் ஏதும் வைத்திருக்கிறதா பாஜக?
கண்டிப்பாக இருக்கிறது. இம்முறை பாஜக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்கும். மகளிரின் பொருளாதாரத்தை, வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்களை அறிவிப்போம். அப்படியான சக்சஸ் மாடலை மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களிலும் அண்மையில் பிஹாரிலும் செய்து காட்டி இருக்கிறோம். ஆகவே, மோடியின் வுமன் சென்ட்ரிக் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
திமுக அமைச்சர்களை மட்டும் துரத்தும் அமலாக்கத் துறை, அதிமுக முன்னாள் அமைச்சர்களை பாராமுகமாக இருப்பது அரசியல் இல்லையா?
அமலாக்கத்துறை ஒரு தன்னாட்சி அமைப்பு. அங்கே அரசியலுக்கு வேலை இல்லை. ஆகவே, அப்படியான தோற்றம் தவறான தோற்றம். எந்த வழக்காக இருந்தாலும் கோர்ட்டுக்கு அமலாக்கத் துறை பதில் சொல்ல வேண்டும்.
ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் 16 சதவீத பொருளாதார வளர்ச்சி கண்டிருப்பதாக பெருமிதம் கொள்கிறதே திமுக..?
எல்லாமே பேப்பரில் மட்டும் தான் இருக்கிறது. எப்போது பொருளாதாரம் உயர்கிறதோ அப்போது சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அப்படியா இருக்கிறது? பொருளாதாரம் கீழ்நோக்கிப் போவதால் தான் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ரோட்டில் போகும் பெண்களின் தாலியை அறுத்துக் கொண்டு ஓடும் நிலையில் தான் தமிழக பொருளாதாரம் இருக்கிறது.
நீங்கள் சாட்சியமளித்த 2ஜி அலைக்கற்றை வழக்கின் அப்டேட் என்ன?
2017-ல் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ 2018-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அப்பீல் செய்ய முகாந்திரம் இருப்பதாக 2024-ல் தெரிவித்த நீதிமன்றம், வெள்ளிக் கிழமை தோறும் விசாரிக்கவும் உத்தரவிட்டது. ஆனால், குற்றவாளிகள் தரப்பு வக்கீல்கள், ஆவணங்கள் டிஜிட்டலில் வேண்டும் உள்ளிட்ட பல காரணங்களைச் சொல்லி விசாரணையைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.