பரணிதரன், அமல்ராஜ்
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் முதல் இரு உறுப்பினர்களாக நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் சி.பரணிதரன் மற்றும் தற்போதைய பார் கவுன்சில் தலைவரான சென்னையைச் சேர்ந்த பி.எஸ்.அமல்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் மொத்தம் உள்ள 25 உறுப்பினர் பதவிகளில் 2 பெண் உறுப்பினர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நியமன முறையில் நியமிக்கப்படுவர்.
எஞ்சிய 23 உறுப்பினர் பதவிகளுக்கு 5 பெண் உறுப்பினர்கள் மற்றும் 18 ஆண் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மார்ச் 30-ம் தேதி அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்தது.
இந்த தேர்தலில் 143 வழக்கறிஞர்கள் போட்டியிட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கை கடந்த இரண்டரை மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞரான சி.பரணிதரன் 3 ஆயிரத்து 819 வாக்குகள் பெற்று முதல் உறுப்பினராகவும், தற்போதைய பார் கவுன்சில் தலைவரான பி.எஸ்.அமல்ராஜ் 3 ஆயிரத்து 40 வாக்குகள் பெற்று இரண்டாவது நபராகவும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல 23 இடங்களுக்கும் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, 2 நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுவர்.