அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி படையில்லாத மன்னவனாக இருக்கிறார், என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி, சேலம் அண்ணாபூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியது: மதத்தின் பெயரால் வாக்குகளை வாங்க நினைப்பவர்களிடம் யார் அடிமையாக இருந்தாலும், நாங்கள் அதற்கு எதிராக இருப்போம். படையில்லாத மன்னவனாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இருக்கிறார்.
மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் தொகுதிகளை கேட்க வரவில்லை. அவர்கள் முடிவை சொல்லி ஒப்புக்கொள்ளச் சொல்லவே வந்துள்ளார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக-வுக்கு 75 தொகுதிகள் கேட்டு அடம் பிடித்து வருகின்றனர். அதில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கான சீட் உள்ளடங்கும். தற்போது, அதிமுக-வை 80 சதவீதம் அழித்து விட்டனர்.
பாமக தொண்டர்கள் தந்தைக்கு ஒட்டு போடுவதா, மகனுக்கு ஓட்டு போடுவதா என்ற குழப்பத்தில் உள்ளனர். பாமக-வைத்து இனி படம் காட்ட முடியாது. தவெக உடன் இணைவது குறித்து நாங்கள் ஆதரவாளர்களுடன் கலந்தாலோசனை செய்து முடிவெடுப்போம். ஓபிஎஸ் பாஜக-வை விட்டு வர மாட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.