சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் வெற்றி தமிழகம் - தொலைநோக்கு ஆவணம் செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதல் மண்டல மாநாடு, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு அமைச்சர் என்.ஆனந்த் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், ஆணையர் அமுதவல்லி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த திட்ட இயக்குநர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது:
கிராமங்களின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் மிகப்பெரிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதே முதல்வரின் நோக்கம். தேர்தல் நேரத்தில் ஒரு கிராமத்துக்குச் சென்றபோது, 2 பெண்கள் என்னிடம் வந்து, ‘‘காலைக் கடனைக் கழிப்பதற்காக 3 முதல் 4 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் கூறினர். அந்தக் கிராமத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்த கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாததால் அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை’’ என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்தப் பகுதி மக்களை ஒருங்கிணைத்து கழிப்பறையை சுத்தம் செய்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். ஒரு கிராமத்துக்குச் சென்றபோதே இவ்வளவு சிரமமான சூழ்நிலையைப் பார்க்க முடிகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள 12,571 கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான நிதி மற்றும் ஏற்பாடுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.