மதுரை: திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழாவை தொடங்கியது. இதை முன்னிட்டு கடந்த 19 நாட்களாக மலைக்குப் போகும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் அகற்றப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. மேலும், மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லவும் பக்தர்கள் நேற்று பிற்பகல் முதல் அனுமதிக்கப்பட்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழாவை யொட்டி டிச.3-ல் உச்சிப்பிள்ளை யார் கோயில் முன்புள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. அன்றைய தினம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் கடைப்பிடிக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், தமிழக அரசின் மேல் முறையீட்டு வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது.
இதற்கிடையே திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் பள்ளிவாசல் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நேற்று முன்தினம் (டிச.21) இரவு 9.45 மணியளவில் நடைபெற்றது. அதற்கு முந்தைய நாள் தர்கா நிர்வாகத்தினர் மலைக்குச் செல்ல போலீஸார் அனுமதித்தனர். அதற்கு பழனியாண்டவர் கோயில் அடிவாரத்திலுள்ள கோட்டைத்தெரு பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர் தீபம் ஏற்றுவதற்கும், மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லவும் அனுமதி தராத போலீஸாரைக் கண்டித்தனர்.
இந்நிலையில் ஜன.6-ம் தேதி வரை சந்தனக்கூடு விழா நடைபெறுகிறது. அதுவரை தர்கா நிர்வாகத்தினர் மற்றும் முஸ்லிம்கள் மலை மீது தடையின்றி செல்ல போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இதே கோரிக்கையை முன்வைத்து, இந்து முன்னணி அமைப்பு சார்பில் நேற்று மதுரை ஆரப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் எதிரொலியாகவும் மக்களின் வேண்டு கோளுக்கிணங்கவும் நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு பின்னர் மலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் 19 நாட்களாக காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல இருந்த தடை நீக்கப்பட்டது. மலைக்குச் செல்லும் பக்தர்களின் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றைப் பதிவு செய்துகொண்டு போலீஸார் அனுமதித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘சந்தனக்கூடு திருவிழாவுக்கு முஸ்லிம்கள் செல்வதற்காக தற்போது போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். கோயிலுக்குச் செல்ல வழங்கியுள்ள இதே அனுமதியை சந்தனக்கூடு திருவிழா நிறைவுபெற்ற பிறகும் வழங்க வேண்டும்’’ என்றனர்.