தமிழ்நாடு, புதுச்சேரி கூட்டு வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத் தில் பேசிய அதன் தலைவர் நந்தகுமார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி | 

 
தமிழகம்

இ-ஃபைலிங் முறையை நிறுத்தக் கோரி ஜன.7-ல் சென்னை உயர் நீதிமன்றம் முற்றுகை: வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையை நிறுத்திவைக்கக் கோரி ஜன.7-ல் சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு - புதுச்சேரி கூட்டு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகளை நேரடியாகவும், மின்னணு முறையிலும் தாக்கல் செய்யலாம் என்ற நிலையில், 1.12.2025 முதல் மாவட்ட நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-ஃபைலிங் முறையை வழக்கறிஞர்கள் எதிர்க்கவில்லை.

அதேநேரம், இம்முறைக்கு வலுவான இணையதள வசதி இருக்க வேண்டும். குறிப்பாக, மலையடி வாரப் பகுதியில் உள்ள நீதிமன்றங்களில் போதுமான இணையதள வசதியில்லை. மேலும், குடும்பநல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்பவர்களே இணையதளத்தில் தனி முகவரியை உருவாக்கி, அதன் வழியாக மனுக்களை தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இதனால் வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவேதான், இ-ஃபைலிங் முறையில் உள்ள குழப்பங்களையும், குறைபாடு களையும் சரி செய்யக் கோரி வருகிறோம். இதுதொடர்பாக தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து இ-ஃபைலிங் முறையில் உள்ள குறைபாடுகளைக் களையவும், அதுவரை இ-ஃபைலிங் முறையை நிறுத்திவைக்கவும் கோரி, 5.12.2025 முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கேரள மாநில நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறை உரிய கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், இங்கு உரியகட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் கேரளத்தைப் போல் தமிழகத்தில் இ-ஃபைலிங் முறையை அமல்படுத்தவும் தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், ஜன.7-ல் சென்னை உயர் நீதிமன்ற முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்பார்கள். தற்போது இ-ஃபைலிங் முறை தொடர்பாக வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும், இந்தப் பயிற்சியில் பங்கேற் குமாறும் வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் வழக்கறிஞர்கள் பங்கேற்க மாட் டார்கள். இவ்வாறு அவர் கூறினார். மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் மோகன்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT