கயல்விழியை கைது செய்ய வலியுறுத்தி, சென்னை அண்ணாநகர் எஸ்பிஐ வங்கி கிளையில், ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 
தமிழகம்

அழகிரி மகள் கயல்விழி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (அடையாறு கிளை) மேலாளரைத் தாக்கிய கயல்விழி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழக கிளை பொதுச்செயலாளர் ரோஷன் கார்க்கி வெளியிட்ட அறிக்கை: அடையாறில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (என்.ஆர்.ஐ கிளை) மேலாளர் ஹர்ஷீன் சிங் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அவதூறான நடத்தையை கண்டிக்கிறோம்.

கட்டிடத்தில் பழுதடைந்த லிஃப்டை சரிசெய்யும்படி கட்டிட உரிமையாளரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழி அழகிரி மற்றும் அவரது பிரதிநிதியிடம் அந்த மேலாளர் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதற்கு எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

கட்டிட உரிமையாளரான கயல்விழி, வங்கிக்கு நேரில் வந்து, மேலாளரை மிரட்டியும், அவதூறாகப் பேசியும் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் வங்கி ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பணிபுரியும் இடத்தில் அவர்களுக்குரிய கண்ணியம் குறித்து கவலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

வங்கி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பணிபுரியும் இடத்தில் அவர்களின் கண்ணியத்தை காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT