தமிழக-கேரள எல்லையான குமுளி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்.
கூடலூர்: கேரள மாநிலத்தில் வரும் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் 8, 9 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் இருந்து தோட்டத் தொழிலாளர்கள் கேரளத்துக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக- கேரள எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு வழியாக கேரளா செல்வதற்கான மலைச்சாலைகள் உள்ளன. இங்குள்ள இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய், காபி, தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இங்கு பணியாற்ற தமிழகத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், வரும் 9-ம் தேதி கேரள சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கடந்த சில வாரங்களாக மாநில எல்லையில் இரு மாநில அதிகாரிகள் சார்பில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, கேரளத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.9 மற்றும் அதற்கு முந்தைய நாளான 8 ஆகிய 2 நாட்கள் கேரளாவுக்குள் தோட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வரும் ஜீப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வழக்கமான பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘வரும் 9-ம்
தேதி வாக்குப் பதிவுக்காக கேரளத்தில் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்று எஸ்டேட் உள்ளிட்ட பல இடங்களில் எந்த வேலையும் நடைபெறாது. மேலும் அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாளில் வெளிமாநிலத்தில் இருந்து அதிகப்படியான ஆட்கள் இங்கு வருவது நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால், இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது’ என்றனர். இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள், ஜீப் ஓட்டுநர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.