சென்னை: செயற்கை சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டதால் 11 வகை மதுபானங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தடை திடீரென நீக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) கடந்த ஆக.11-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் செயல்படும் என்ரிகா எண்டர்பிரைசஸ் மதுபான ஆலையில் சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறி வி.எஸ்.ஓ.பிஎக்ஸா கோல்ட் பிராந்தி, லூயிஸ் வெர்னான்ட் எக்ஸ்ஓ பிளண்டட் பிரீமியம் பிராந்தி, மெக் டவல்ஸ் வி.எஸ்.ஓ.பி பிராந்தி, நம்பர் 1 மெக் டவல்ஸ் ஃபைன் பிராந்தி, மேன்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ ஃபைன் பிராந்தி, என்ரிகா வி.எஸ்.ஓ.பி செலெக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்.ஓ பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி, என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் ஆகிய 11 மது பானங்களின் விற்பனையைத் தடை செய்ய எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து கடந்த 13-ம் தேதி 11 வகை மதுபானங்கள் விற்பனைக்கு டாஸ்மாக் நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் (14-ம் தேதி) எஃப்எஸ்எஸ்ஏஐ மதுவிலக்கு ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சட்டம் 2006-ன் பிரிவு 36(3)பி-ன்படி தடை உத்தரவு திரும்பப்பெறப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் 11 வகை மதுபானங்கள் விற்பனைக்கான தடையை நீக்கியுள்ளது.