கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், ‘பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் வகையிலான புகையிலை பொருட்களை தயாரித்தல், பதுக்கி வைத்தல், கொண்டு செல்லுதல், விநியோகித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையானது வரும் 2027 ஆண்டு மே 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி எவரேனும் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற போதை பொருட்களை தயாரித்தாலோ, கடத்தினாலோ அல்லது பதுக்கி வைத்து விற்பனை செய்தாலோ அவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஓராண்டு தடை நீட்டிப்பு மே 23-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் புகையிலை மற்றும் நிகோடினை மூலப்பொருட்களாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் மீது, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் கடந்த 2013-ம் ஆண்டு மே 23-ம் தேதி அன்று தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மே 23-ம் தேதியுடன் கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான தடையை நீட்டித்து, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளது கவனிக்கத்தக்கது.