சென்னை: கோயில்களுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்வது தொடர்பான கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களின் மரபுகள், வழிபாட்டு முறைகள் மற்றும் புனிதத் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோயில்களுக்குள் செல்போன்கள் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டு, பக்தர்கள் தங்களது செல்போன்களை நுழைவுப் பகுதியில் உள்ள பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டனர்.
இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலான பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், செல்போன்களை ஒப்படைப்பது தொடர்பாக கோயில் பணியாளர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதங்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், செல்போன்களைப் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்குமாறு பக்தர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பக்தர்கள் தாங்களாக முன்வந்து செல்போன்களை ஒப்படைக்க விரும்பினால் மட்டுமே அவற்றைப் பெற்று பாதுகாப்பு மையத்தில் வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கோயில்களுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்லும் பக்தர்கள், மற்றவர்களின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில்களின் வழிபாட்டு அமைதியைப் பாதுகாப்பதுடன், செல்போன் கட்டுப்பாடுகளால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் தவிர்க்கும் வகையில் இந்தத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.